பேராசிரியர் தொ.ப வுடன் ஒரு நேர்காணல்
பேராசிரியர் தொ. பரமசிவன் (பிறப்பு: 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். பேராசிரியர் தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ. பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுப் பெற்றவர்.
இவர் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு மானுடவியல் அறிஞர்.
பேராசிரியர்.தொ.பரமசிவன்
(கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வசனத்தை கமலஹாசனுக்கு எடுத்துக் கூறியவர் பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பேரா.தொ.ப அவர்கள்)
அவரிடம் உரையாடியதிலிருந்து...
1) ஜல்லிக்கட்டு- இளைஞர் எழுச்சிப் போராட்டம் எப்படி பார்க்கிறீர்கள்?
பேராசிரியர்.தொ.ப: இது ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடந்த போராட்டம் அல்ல, மைய அரசுக்கெதிராக மைய அரசின் தமிழ் விரோதப் போக்கிற்கெதிரான ஒரு தன்னெழுச்சிப் போராட்டமாகத் தான் நான் கருதுகிறேன்.
2) சிறுதெய்வ வழிபாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பேராசிரியர்.தொ.ப: சிறுதெய்வ வழிபாடு அப்படியே தான் இருக்கும். நவீனத்தின் சில சாயல்கள் படியுமே தவிர சிறுதெய்வ வழிபாடு அப்படியே தான் இருக்கும்.அதை அழிக்க முடியாது.
3) தாமிரபரணிக் கரை நாகரிகம் தான் உலகின் அல்லது இந்தியா வின் மூத்த நாகரிகமாக இருக்குமா?
பேராசிரியர்.தொ.ப: தாமிரபரணிக் கரை நாகரிகம் தான் உலகின் மூத்த நாகரிகமாக இருக்கும் என மனோன்மணீயம் சுந்தரனார் கருதினார். அதைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் தேவை. அதற்கு பிறகு தான் உறுதிப்படுத்த முடியும்.
4) இன்றைய சூழலில் திராவிட இயக்க கொள்கைகளின் மறு பிரவேசம் (அல்லது) திராவிட இயக்கங்களின் மறு எழுச்சி தேவையா?
பேராசிரியர்.தொ.ப: ஆம். அழிந்து விட்ட சாம்பலில் இருந்து எழுகின்ற பீனிக்ஸ் பறவையைப் போல திராவிட இயக்கத்தின் அழிவிலிருந்து மற்றுமொரு திராவிட இயக்கம் எழ வேண்டும். உத்திகள் காலத்திற்கு காலம் மாறுபடும். பெரியாரை ஒழுங்காகப் படித்தால் போதும்.
5) சாதியப் பார்வை தற்போது தலைதூக்கியுள்ளதைப் போல ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறதே - அதைப் பற்றி?
பேராசிரியர்.தொ.ப: தேசிய இன உணர்வு மேலோங்கி நிற்கிற போது சாதிய உணர்வு பின்தங்கும். தேசிய உணர்வு பின்தங்கும் போது சாதிய உணர்வு மேலெழும். ஒரு காலத்தில் சாதிப்பட்டத்தை எல்லாம் பெயருக்கு பின்னே போடக் கூச்சப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அது தமிழ் தேசிய உணர்வு மேலோங்கி நின்ற காலம்.
6) இன்றைய இளைஞர்களுக்கு எழுத்து வாசிப்பு மட்டும் தான் இல்லையா இல்லை மனித வாசிப்பும் இல்லையா?
பேராசிரியர்.தொ.ப: இன்றைய இளைஞர்களுக்கு மனித வாசிப்பு இல்லை என்பதே உண்மை, எழுத்து வாசிப்பு மனித வாசிப்பிற்குப் பின் தான்.
மனித வாசிப்புங்கிறத எப்படி புரிந்துகொள்வது ஐயா?
என்னுடைய புத்தகம் - மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. அதைப் படியுங்கள் ஒரு தெளிவு கிடைக்கும்.
7) தமிழ்மொழியின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
பேராசிரியர்.தொ.ப: நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.ஆனால் நம்பிக்கை இழக்கக் கூடிய வகையில் இருக்காது.ஏனென்றால் இந்த மொழி சந்திக்காத சவால்கள் இல்லை. இந்த மொழி சந்திக்காத சோதனைகள் இல்லை.அது அத்தனையும் தாண்டி நிற்கிற போது இனி வரக்கூடிய சோதனைகளையும் தாண்டி நிற்கும்.
8) தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்களின் தரம் அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?
பேராசிரியர்.தொ.ப: அன்று பொதுநல உணர்வு மேலோங்கி நின்றது. இன்று சுயநல உணர்வு மேலோங்கி நிற்கிறது. அன்று பரிசுகள் கிடைத்தன.இன்று பரிசுகள் கிடைப்பதற்காகவே எழுதுகிறார்கள்.
9) உங்களுடைய நிறைவேறாத ஆசை அல்லது நிறைவேற வேண்டும் என்று நினைக்கக் கூடியது என்ன?
பேராசிரியர்.தொ.ப: சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும்.
ஐயா, இத்தனை நூல்களைப் படித்து இவ்வளவு தூரம் எங்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்த நீங்களே இப்படி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது...
அப்படி என்றால் நாங்களெல்லாம்!! அதுக்கு காரணம் என்ன ஐயா? சிலப்பதிகாரம் எப்படி காலந்தோறும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது?
பேராசிரியர்.தொ.ப: காலந்தோறும் அது புதுப் புதுக் கோலம் கொள்கிறது. அது தான் நிலைத்து நிற்கும்.
கடைசியாக ஒரு கேள்வி -
10) நெல்லைச் சீமை அல்லது தாமிரபரணிக் கரையின் சிறப்புகள் பற்றி சில வார்த்தைகள்....
பேராசிரியர்.தொ.ப: உலகின் மூத்த நாகரிகக் குடிகள் இங்கே வாழ்ந்திருக்கின்றன. அதனுடைய எச்சங்கள் இன்னும் இருக்கின்றன. இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை.
Comments
Post a Comment