முருகன் அசைவக் கடவுளா?
சில மாதங்களுக்கு முன்பு சுகிசிவம் அவர்கள் ஒரு காணொளி பதிவிட்டதினால் ஒரு சர்ச்சை கிளம்பியது. முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா என்பது அதனுடைய தலைப்பு. நாம் அங்கே சுற்றி இங்கே என்று மீண்டும் அதே புள்ளியில் வந்து தான் இருக்கிறோம்.
தமிழர்கள் வழிபட்ட முருகனும் இன்றைய சுப்பிரமணியனும் வேறு வேறா? முருகர் அசைவ கடவுளா? எனக் கேட்டால் நான் சொல்லி விடுவேன் ஆம் என்று. ஆதாரம் கேட்பார்கள், எதிர்க் கேள்வி கேட்பவர்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் சொல்வார்கள், பல தெய்வங்கள் பிறந்திருக்கின்றன, பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன. அதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு தெய்வ வழிபாடு மேலோங்கி நின்று பின்பு அறவே இல்லாது போகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் வழிபடப்பட்ட மூதேவி எனப்படும் மூத்த தேவி தற்காலத்தில் யாராலும் தொழப்படுவது இல்லை. அந்த தெய்வம் இறந்துவிட்டது. இன்று பல தெய்வங்கள் புதுப்பிறவி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. சான்றாக சாய்பாபாவைச் சொல்லலாம். புற்றீசல் போல பெருகிக் கொண்டே வருகிறார்.
நாம் முருகருக்கு வருவோம். சாய்பாபாவை அப்புறம் பார்ப்போம். தமிழின் மிகத் தொன்மையான நூலாக கருதப்படும் தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய கடவுள்களும் குறிக்கப்பட்டுள்ளன. முருகன் அல்லது சேயோன் என்பவர் குறிஞ்சி நிலத்தின் கடவுள் என தொல்காப்பியம் இயம்புகிறது. குறிஞ்சி நிலம் என்றால் என்ன? நம் எல்லோருக்கும் தெரியும் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று. முருகன் குறிஞ்சி நிலக் கடவுள் என்பதற்கு இன்றும் சான்றாய் இருப்பது முருகன் கோவில்கள் தான். அவை அமைந்திருப்பது பெரும்பாலும் மலைகளின் உச்சியில் தான். தற்பொழுது பலரும் கட்டியிருக்கும் கோயில்களை நான் சொல்லவில்லை, புகழ்பெற்ற முருகன் கோயில்கள் அனைத்தும் மலைமீது அமைந்திருக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவில் கூட கந்தமாதன பர்வதம் எனப்படும் சந்தனம் மலையின் மீதுதான் அமைந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் குறிஞ்சி நில மக்கள் வழிபட்டு வந்த சேயோன் தற்பொழுதும் தமிழகத்தின் குறிஞ்சி நில மக்களுடனான நெருங்கிய தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிடவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் எனும் ஊரில் வேளிமலை குமாரகோவில் அமைந்துள்ளது. இங்கே மூலவர் வள்ளி தெய்வானை என இரு மனைவியருடன் காணப்படுவது இல்லை. கருவறையில் குமாரரும் வள்ளியும் மட்டுமே மூலவராக இருக்கின்றனர். பங்குனி மாதம் நடைபெறும் வள்ளி திருமண நிகழ்வில் குறவர் இன மக்களே முன் நின்று சிறப்பிக்கின்றனர். இங்கே அருகாமையில் வள்ளி சுனை, வள்ளி குகை, வள்ளிச்சோலை, கிழவன்சோலை, வட்டக்காவு என பல இடங்கள் பண்டையகால முருக வழிபாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுக்கு சான்றாக இருக்கின்றன. தலமரமாக வேங்கை மரம் இருக்கிறது. இன்றைய சூழ்நிலை போல மதம் நிறுவனப் படுத்தப் படாத அன்றைய சூழ்நிலையில் மக்கள் தங்களுக்கு தெரிந்த முறைகளைப் பயன்படுத்தி, தங்களது தெய்வத்தைத் தொழுது வந்தனர். அவர்கள் என்ன உணவு உண்டனரோ அதையும் அதை விட சிறந்ததையும் அந்த தெய்வத்திற்கு படையலாக படைத்தனர். தமிழ் மரபை எடுத்துக்கொண்டால் இங்கே தெய்வத்திற்கு படையல் என்பது பெரியதாக போடப்படும். விழா நேரங்களில் தெய்வத்தின் முன்பாக பல்வகை காய்கறிகளோடு உணவுகளோடு அசைவ உணவுகளோடு படப்பு ஏற்றப்படும். தென்மாவட்டங்களில் இன்றும் மிகப் பரவலாக இதை நீங்கள் காணலாம். முருகனுக்கும் இதேபோல படைப்புகள்தான் போடப்பட்டிருக்கின்றன. தினை மாவு, தேன், கோழி இரத்தம், ஆடு போன்றவை படையலாக தரப்பட்டிருக்கின்றன.
என் கண்ணெதிரே நான் பார்த்த காட்சியை உங்களுக்கு சொல்கிறேன். எங்கள் அம்மாவின் ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம். அங்கே ஊரின் காவல் தெய்வமாக இருப்பது வண்டி மறித்தம்மன் (வண்டி மலைச்சியம்மன்) கோவில். எங்கள் ஆச்சி காலத்தில் அசைவச் சாமியாக இருந்த வண்டிமறிச்சான் எங்கள் அம்மாவின் காலத்தில் சைவமாகிப் போனது. காரணம் என்ன? ஊர் சமுதாயக் கமிட்டி முடிவு செய்து அசைவ உணவை/பலியைத் தடை செய்து விட்டனர். சாமிக்கு ஏற்றப்படும் படைப்பில் முட்டை மட்டுமே இருக்கும். வேறு எந்த அசைவ உணவும் இராது. எனினும் சாமக்கொடை முடிந்த பின்பு மறுநாள் காலை ஆடு, கோழி பலி கொடுக்கப்படுவது இருக்கிறது. அது கோவில் சார்பாகவோ அல்லது கமிட்டி சார்பிலோ அல்ல! தனி ஆள்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டு வந்து வெட்டுவது. வருங்காலத்தில் தனியாட்கள் வெட்டாமலேயே போகலாம். அப்புறம் என்ன? ஒரு காலத்தில் அந்த தெய்வம் சைவம் என்று நம்மால் நம்பப்பட்டு விடும். அவ்வளவுதான். ஒரு எளிய சான்று.
வேலன் வெறியாட்டு:
வேலன் வெறியாட்டு எனப்படும் ஒரு நிகழ்வு சங்க காலம் தொட்டு நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதைப் பற்றி குறிப்பிடும்பொழுது பல சங்க இலக்கியங்கள் வேலனை பற்றியும் வேலனுக்கு தரப்படும் படைப்புகளைப் பற்றியும் பேசுகின்றன.
குறிஞ்சிக் கிழவனாம் முருகன் எளியோர் போற்றும் ஏழைப் பங்காளனாய், வேடரில் ஒரு வேடனாய், குறவர்களுக்கு நடுவே ஒரு குறவனாய் போற்றப்பட்டான்.
வானுறையும் தெய்வம் மனிதர் ஒருவர் மேல் வந்து ஆவேசித்து பேசும் என்ற தொன்மத்தின் படி அமைந்த வழிபாடு. குறிஞ்சி நிலத்தில் முருகனின் அருள் வேண்டியோ குமரி பருவ பெண்கள் ஏக்கமுற்று வாட்டமுடன் இருந்தாலோ அவளின் தாய் இந்த நிகழ்வை நடத்துவதாக இலக்கியங்கள் பேசுகின்றன.
வெறியாட்டு நிகழ்த்துபவன் வேலன் எனப்படுவான் கையில் வேல் தாங்கி மார்பில் சந்தனம் பூசி மலர் மாலைகளை சூடியிருப்பான். வெறியாட்டு நிகழும் இடம் களம் என்று அறியப்படும், வீட்டின் முற்றமோ திறந்த வெளியே சேவற்கை கொடியோடு களமாய் விளங்கும்.‘‘வேலன் வெறிஅயர் வியன்களம்’’ (அகம்)
முருகனின் வாகனம் யானை மயில்களை துதிப்பர், கடம்ப மரத்தை வழிபடுவர், பூக்களும் புகையும் இட்டு முருகனை வாழ்த்தி வேலன் ஆடி வழிபாடு நிகழ்த்துவான்.
ஆட்டுக்கிடாய் அறுத்து திணையோடோ சோற்றோடோ கலந்து படைக்கப்படும். இது முருகையர்தல் முருகாற்றுப்படுத்துதல் என்றும் அழைக்கப் பெறும்.
பாட்டுக்களில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படையில் வெறியாட்டு விரித்து பேசப்பெறுகிறது.
...அதா அன்று;
சிறுதினை மலரோடு விரைஇ மறியறுத்து
வாராணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்..
சிறு திணையோடு ஆடு அறுத்து படைத்தும் கோழிக்கொடியுடன் மலர்கள் பரப்பியும் விழா எடுக்கப்பட்டது.
இதே வெறியாட்டு நிகழ்ச்சி சிலப்பதிகார குன்றக் குரவையிலும் பேசப்படுகிறது
"வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே"
வேலன் வந்து வெறியாடலைச் செய்யும் விரும்பத்தக்க களத்திடத்தே, கல்லாலமர்ந்த இறைவன் புதல்வனாகிய முருகன் நீல நிறமுடைய மயிலின்மீது சிறந்த கலனை அணிந்த வள்ளி யோடும், வருவான், அங்ஙனம் வந்தால் அவனைப் பெரிய மலையினையுடைய வெற்பன் நம்மை மணஞ்செயது கோடல் கருதி வணங்குவோம் ;
சங்ககாலச் சான்றுகளாக இவை இருக்கின்றன. இன்றைய கேரள மாநிலத்தின் தெய்யம் ஆட்டம் வேலன் வெறியாட்டத்தின் உருமாறிய வடிவமாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து.
தெய்யம் ஆட்டக்கலைஞர்
நீங்கள் பொன்னியின் செல்வன் படித்து இருந்தால் அறிந்திருக்கக் கூடும். அதிலே வேலன் வெறியாட்டு வரும். முனைவர் மு சண்முகம் பிள்ளை என்பவர் பெரியதொரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறார், சங்ககால அசைவ முருகனைப் பற்றி. அதிலேயே அசைவம் உண்ணும் தெய்வமாக முருகர் இருப்பது தெரியவருகிறது. இவை யாவும் வெறும் வாய்ப்பேச்சுகள் அல்ல; சங்க இலக்கியங்கள் தரும் தரவுகளின் அடிப்படையில் பேசப்படுபவை. [1]
அப்படி என்றால் முருகர் எப்படி சைவ கடவுளாக மாறினார்? எப்படி தெய்வயானையை மணம் புரிந்தார்? எப்படி சமஸ்கிருத மந்திரங்களை மட்டுமே காதில் வாங்பவராக மாறிப்போனார்?
மனுதர்மத்தின் அதிமுக்கிய நூலாகிய மனுஸ்மிருதி அந்தகாலத்தில் ஆரியர் தவிர்த்து ஏழு பழங்குடியினர் ஆரியவர்த்த நிலப்பகுதிக்கு வெளியில் வசித்ததாக கூறுகிறது. அதிலே ஒன்றுதான் நம் திராவிடர் இனம். ஆக திராவிடர்கள் ஆகிய பழங்குடியினர் தமிழ் நிலத்தில் தங்களுக்கே உரிய தனி பண்பாடு, நாகரீகத்தோடு வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது திண்ணம். அவர்கள் ஐவகை நிலங்களையும் ஐவகை கடவுளர்களையும் வழிபட்டு இருக்கின்றனர். இப்பொழுது நாம் மிக எளிதான ஒரு தர்க்கத்தை செய்வோம். நாம் முருகரை வழிபாடு செய்தோமானால் அது நம்முடைய பண்பாடு. நம்மையே ஆதிவாசிகள் என்று சொல்லிவிட்டனர். எனவே அந்த தெய்வமும் ஆதிவாசி தெய்வம் தானே? பின்னே அந்த தெய்வத்திற்கு உடனான ஆரியத்தின் தொடர்பு எங்கே இருக்கிறது?
மீண்டும் சொல்கிறேன். ஆரியர்கள் வழிபட்ட தெய்வம் அல்ல, முருகன். காலப்போக்கில் சங்ககாலத்திலேயே அந்த மடைமாற்றம் தொடங்கிவிட்டது. ஆரியர் எங்கெங்கெல்லாம் இடம்பெயர்ந்தார்களோ அங்கெல்லாம் அந்த நிலத்தின் கடவுள்களை தங்கள் கடவுளாக மடைமாற்றம் செய்ய தொடங்கினர். அவற்றின்மேல் புனைக்கதைகளை திணிக்க தொடங்கினர். அப்படியாகத்தான் சேயோன், மாயோன் ஆரியக் கடவுள் ஆகிப்போனார். மனுஸ்மிருதியிலும் சரி, வேதத்திலும் சரி திருமால் குறிப்பிடப்படவில்லை, முறையே முருகனும்.
பின்னர் எப்படி சமஸ்கிருத மந்திரங்களை மட்டுமே கேட்கும் கடவுள் ஆகிப் போனார் முருகன்?
சங்க காலத்தில் தொடங்கிய இந்த மடைமாற்றம் ஆதிசங்கரர் காலத்தில் தீவிரம் பெற்று முருகன், சுப்பிரமணியன் ஆகவும், கார்த்திகேயன் ஆகவும் மாறிப்போனார். வடநாட்டு நம்பிக்கைகள் எல்லாம், வடநாட்டு பெயர்கள் எல்லாம் அவர் மேல் திணிக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கான இருந்த வழிபாட்டு இடங்களிலும் பார்ப்பனர் உள் புகத் தொடங்கினர். சில நூற்றாண்டு முன்பு வரையிலும், பழனி கோவிலில் பூசை செய்யும் உரிமை அங்குள்ள பண்டார வகையினருக்கு தான் இருந்தது. தற்பொழுது முழுவதும் பார்ப்பனரே! பழனி கோவிலுக்கு மட்டுமல்ல பல கோவில்களுக்கும் நிகழ்ந்த கதிதான் இது. அந்த மரபின் தொடர்ச்சியாக பல கோவில்களில் இன்றும் திருவிழாக்களின் பொழுது அன்று பூசை செய்த வகையினர் முன்னுரிமை பெறுகின்றனர்.
வள்ளி மணாளனாக அறியப்பட்ட முருகர் எப்படி தெய்வயானையை மணந்தார்? என்பதற்கான காரணம் புதிது ஒன்றுமில்லை. வடநாட்டு சுப்பிரமணியர் தமிழ்நாட்டு முருகனுடன் இணைக்கப்பட்ட போது அவருடைய மனைவியும், முருகனின் துணை ஆக்கப்பட்டு விட்டார். அதற்கு ஒரு கதையும் புனையப்பட்டு விட்டது. பிறப்பிற்கு ஒரு கதை, திருமணத்திற்கு ஒரு கதை, வீரத்திற்கு ஒரு கதை, தீரத்திற்கு ஒரு கதை என கதை மேல் கதை புனையப்பட்டு முருகர் மெல்ல மெல்ல சுப்பிரமணியர் ஆகிப்போனார்.
இன்றைக்கும் பாருங்கள் முருகன் என்கிற பெயரை பார்ப்பனர்கள் பயன்படுத்த மாட்டார்கள். தமிழ் கடவுளின் பெயரான முருகன், வேலவன், வேலன், குமரன், ஆறுமுக நயினார், செந்திலாண்டவன், குமரவிடங்கன், பழனி ஆகிய பெயர்களை எந்த பார்ப்பனராவது வைத்து பார்த்திருக்கிறீர்களா? கந்தன்,சுப்ரமணியன், சோமாஸ்கந்தன், கார்த்திகேயன், சண்முகன், ஜெயந்திநாதன் போன்ற வடக்கத்திய பெயர்களைத் தான் பார்ப்பனர்கள் தொடவே செய்வார்கள்.
என்னதான் பார்ப்பனியம் முருக வழிபாட்டை உட்கொண்டு விட்டாலும், முருக வழிபாட்டில் இருக்கும் தமிழ் கூறுகள் இன்றும் அழிந்துவிடாமல் தான் இருக்கின்றன. காவடி எடுத்தல், மொட்டை போடுதல், படைப்பு போடுதல் போன்ற வழக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. இவை வைதீகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
எங்கள் ஆச்சி வீட்டு குடும்பம் சங்கரன்கோவிலிலேயே ஓரளவு பெரிய குடும்பம். நாங்கள் மாசி மாதம், மகத்தன்று ஆறுமுக நயினாருக்கு குருபூசை அதாவது படைப்பு போடுதல் வழக்கம். அனைவருக்கும் அன்று சாப்பாடு போடுவர். முக்கியமாக பண்டாரங்கள் அழைத்து அவர்களுக்கு முதலில் உணவளித்து அதன்பின்னரே எங்களுக்கும் உணவு பரிமாறுவர். இது வைதீகத்தின் பிரதிபலிப்பு அல்ல, தமிழ் மரபின் எச்சம். முருகனுக்கு உகந்ததாகச் சொல்லப்படும் நாட்கள் எல்லாம் எவை என்று பார்த்தால், பெரும்பாலும் முழுநிலவு நாட்களாக இருக்கும். அந்த காலத்தில் மக்கள் இரவு நேரத்தில் விழா எடுப்பதையே விரும்பினார். முருகனுக்காக விழாக்கள் மட்டுமல்ல தமிழர் விழாக்கள் பெரும்பாலும் முழுநிலவு நாட்களிலேயே வருகின்றன! அம்மாவாசையன்று விழா கொண்டாடினால் நன்றாகவா இருக்கும்? முழு இருட்டாக இருக்கும் அந்த நாட்களில் விழா கொண்டாடுவது தமிழ் மரபு இல்லை. இதற்கு என்ன காரணம் வேண்டிக் கிடக்கிறது? முழுநிலவு நாட்களில் வெளிச்சம் அதிகம் இருக்கும். தீப்பந்தங்கள் போன்ற செயற்கை ஒளிக்கான தேவை மிகக் குறைவாக இருக்கும். இதன் பொருட்டே தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரை முழுநிலவு நாள், கார்த்திகை விளக்கீடு என அத்தனை நிகழ்வுகளும் முழுநிலவு நாளில் தான் நிகழ்கின்றன. அவரவர்கள் அவரவர் வசதிக்கேற்ப மேற்குறித்த நாள்களில் ஏதேனும் ஒரு நாளில் முருகக் கடவுளுக்கு படையல் போட்டு வந்திருக்கின்றனர்.
இது மட்டுமல்ல இன்னும் பல செய்திகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் பேசிக்கொண்டே இருந்தோமானால் நம்மால் முன்னே நடக்க இயலாது. இன்றைய சூழ்நிலையில் இதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருப்பது நேரக் கொலை என்றுதான் நான் சொல்லுவேன். உங்களுக்கு நேரம் இருந்தால் சென்று சங்க இலக்கியங்களைப் பற்றி படியுங்கள் உங்களுக்கே தெரியவரும்.
[1] http://murugan.org/tamil/shanmugampillai.htm
Nalla pathivu.
ReplyDeleteSuper thambi.
ReplyDelete