மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

தொடர்ந்து அரசியல் பதிவுகளாக இருந்து வரும் சூழ்நிலையில் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வானவியலைப் பார்ப்போம்.

வகைவகையான மேகங்கள்:

உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகை மேகங்கள் இருப்பதாக சொல்கிறது. அவற்றை சுருக்கி ஒரு பத்து வகைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றைப் பற்றி விரிவாக காண்போம்.

1. தாழ்நிலை மேகங்கள்
(குமுலஸ், இசுறேடஸ், இசுறேடோகுமுலஸ்)
இவை கடல்மட்டத்திலிருந்து 6500 அடிக்கு உள்ளாக இருப்பவை.

2. நடுநிலை மேகங்கள்
(அல்டோகுமுலஸ், நிம்போஸ்றேடஸ், அல்டோஸ்றேடஸ்)
இவை கடல் மட்டத்திலிருந்து 6500 அடி முதல் 20,000 அடிக்கு உள்ளாக உருவாகும் மேகங்கள்.

3. உயர் நிலை மேகங்கள்
(சிர்ரஸ், சிர்ரோகுமுலஸ், சிர்ரோஸ்றேடஸ்)
இவை கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடிக்கு மேலான உயரத்தில் இருக்கும் மேகங்கள்.

4. திரள் மேகங்கள்
பெயருக்கேற்றார் போலவே திரள் மேகங்கள், வளிமண்டல கீழ் அடுக்கில் இருந்து கிளம்பி வளிமண்டல மேல் மேலடுக்கு வரை உயர்ந்து காணப்படுபவை.

[ இந்த மேகங்களின் பெயர்கள் தமிழாக்கம் இன்னும் செய்யப்படவில்லை. நீங்கள் முடிந்தால் தமிழாக்கம் செய்து சொல்லுங்கள்.]

நம்முடைய தலைக்கு மேலே என்ன வகையான மேகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? சற்று விரிவாக பார்ப்போம் கீழே.

1. குமுலஸ் (Cumulus)
சிறுவயதில் நாம் மேகம் வரைய சொன்னால் வரைவோமே வட்ட வட்டமாக அவைதான் குமுலஸ் மேகங்கள். இவற்றின் மேற்பகுதி வெள்ளையாகவும் சூரிய ஒளியில் பளிச்சென்றும் கீழே பொதுவாக அடர் நிறத்திலும் இருக்கும். சான்றாக சொல்லவேண்டுமானால் பஞ்சு பார்த்து இருப்போம் இல்லையா? அதே போலத்தான் இருக்கும்.
இந்த வகை மேகங்கள், சூரிய ஒளி நேரடியாக நிலத்தை சூடுபடுத்தும் நல்ல வெயில் இருக்கும் நாட்களில் உருவாகும். மித வானிலை மேகங்களான இவை முற்பகலில் உருவாகும் மாலை மங்கும் போது மறைந்துவிடும்.


2. ஸ்றேடஸ் (Stratus)
வளிமண்டல கீழ் அடுக்கில் சாம்பல் நிறத்தில் தட்டையாக பட்டை போல ஒரே விதமாக காட்சி அளிக்கக் கூடியவை இவ்வகை மேகங்கள். இவற்றை வேறுபடுத்தி அறிய இயலாது. ஒரே பட்டையாகத் தென்படும். மூடுபனியை ஒத்திருக்கும் இவை வானத்தையே மூடிவிடும். இவ்வகை மேகங்களை இருண்ட/மந்தமான நாட்களில் காணலாம். நம்மூரில் வானம் இன்றைக்கு மூடாக்கு அல்லது கூராப்பு போட்டிருக்கிறது என்று சொல்வார்கள் எனில் அன்று இந்த வகை மேகங்கள் இருக்கிறது என்று பொருள். பெரும் மழையை தருவிக்க இயலாத இந்த மேகங்கள், சிறு தூற்றலையோ மூடுபனியையோ உண்டாக்கும்.


3. ஸ்றேடோகுமுலஸ் (Stratocumulus)
தாழ்நிலையில் பஞ்சு போன்ற சாம்பல் அல்லது வெண் நிறத்தில் காணப்படுபவை இவ்வகை மேகங்கள். பின்னணியில் நீலவானம் தென்படும். நேர் கீழே இருந்து பார்க்கும் பொழுது இந்த வகை மேகங்கள் கருகருவென தேன் கூட்டினை போல இருக்கும். மேக மூட்டமான நாட்களில் இந்த வகை மேகங்களைப் பார்க்க முடியும். வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவும் பொழுது இவை பொதுவாக வானத்தில் விரவி காணப்படும்.


4. அல்டோகுமுலஸ் (Altocumulus)
வளிமண்டல நடு அடுக்கில் காணப்படும் பொதுவான மேகங்கள் இவை. வானத்தில் புள்ளி வைத்ததுபோல, இவை இணை அடுக்குகளில் வரிசையாகக் காணப்படும். இவற்றுக்கு சிறந்த சான்று ஆட்டு கம்பளி அல்லது கானாங்கெளுத்தி மீன் செதில் ஆகும். பொதுவாக அல்டோகுமுலஸ் மற்றும் ஸ்றேடோகுமுலஸ் குழப்பிக் கொள்ளப்படும். இவற்றை வேறுபடுத்தி அறிய ஒரு சிறு வழிமுறை இருக்கிறது. உங்களது கையை வானத்தை நோக்கி உயர்த்துங்கள். வட்டவடிவ மேகமானது உங்களது கட்டை விரல் அளவில் இருந்தால் அது அல்டோகுமுலஸ். அதுவே உள்ளங்கை அளவு இருந்தால் ஸ்றேடோகுமுலஸ்.

பொதுவாக இவ்வகை மேகங்கள் காலை அல்லது மாலை நேரத்தில் நல்ல வெயில் /மித வானிலை நிலவும் நாட்களில் தென்படும். இவ்வகை மேகங்கள் தென்பட்டால் அடுத்த சில மணி நேரங்களில் மழை வரும் என்று அறிகுறி. ஆங்கிலத்திலே இதைக்குறித்து ஒரு பழமொழி இருக்கிறது. Mackerel sky, not 24 hours dry. அதாவது கானாங்கெளுத்தி மீன் செதில் போன்ற வானம் தென்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மழை வந்துவிடும் என்பதாம். கனடா, ரஷ்யாஉள்ளிட்ட குளிர் நாடுகளில், நல்ல குளிர் வருகிறது என்பதையும் இவ்வகை மேகங்கள் உணர்த்தும்.


5. நிம்போஸ்றேடஸ் (Nimbostratus)
நல்ல 'கருமேகங்கள்' என்போமே அவைதான் இவை. வானத்தை முழுவதுமாக மூடிவிடும் இவை கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். இவை வளிமண்டலத்தில் கீழ் அடுக்கில் இருந்து நடு அடுக்கு வரை காணப்படும்.

இவை மிகச் சிறந்த மழை மேகங்கள். பரவலாக கனத்த மழை அல்லது பனிப் பொழிவை உண்டாக்க வல்லவை. இந்த வகை மேகங்களை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
நம்ம ஊரில 'ஏலேய் வானம் கருத்திருச்சி! கருங்கடலா இருக்கு' என்று சொன்னால் இந்த வகை மேகங்கள் திரள்கிறது என்று பொருள்.
குஷி படத்தில் ஜோதிகா ஆடும் பாடலில் வரும் மழை கொணரும் மேகங்கள் இவையே! அதைவிடச் சிறப்பாக குரு படத்தில் நன்னாரே பாடலில் வருபவை இவ்வகை மேகங்களே! 'மேகம் கருக்குது தக் சிக் தக் ஜிங்'

கீழே உள்ள படம் நான் பொகாரோவில் இருந்தபோது எடுத்த படம். அங்கே பெய்யும் மழை பயங்கரமாக இருக்கும். அதுவும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மற்றும் கோடை மழை பயங்கரமாக இடி மின்னலுடன் பெய்யும். சமீபத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பிகார் மாநிலத்தில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்த செய்தியை. இவ்வகை மேகங்கள் பொதுவான இடிமின்னலுடன் இணைந்தவை.


6. அல்டோஸ்றேடஸ் (Altostratus)
சாம்பல் அல்லது வெளிர் நீல நிறத்தில் பட்டை போல ஒரே அடுக்காக காணப்படும் இவை வளிமண்டலத்தில் நடு அடுக்கில் இடம்பெறுபவை. என்ன தான் வானத்தை மூடாக்கு போல மூடி இருந்தாலும் நீங்கள் சூரியனை இதன் ஊடே பார்க்க முடியும். என்ன ஒன்று பளிச்சென சூரியக் கதிர் ஒளி இராது. மங்கிய சூரியனைப் பார்க்க முடியும். நீங்கள் ஒருவேளை நெல்லை மாவட்டத்தில் வசித்திருந்தால் சீசன் நேரத்தில் இது போன்ற மேகங்களைப் பார்க்க முடியும். இவை இருந்தால் அன்று நாள் முழுக்க அடைத்தது போல இருக்கும். சாரல் மழை பெய்யும்.


7. சிர்ரஸ் (Cirrus)
இலத்தீன் மொழியில் சிர்ரஸ் என்றால் சுருட்டி முடிச்சிடப்பட்ட முடி (ringlet or curl of hair) என்று பொருள். இந்த மேகங்களும் அப்படித்தான். வெண் நிறத்தில் மெல்லிய இறகு போன்ற வடிவத்தில் வானம் முழுவதும் கீற்று போல காணப்படுபவை இவை. ஏனென்றால், சிர்ரஸ் மேகங்கள் கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்திற்கு மேலான அடுக்கில் காணப்படுவதால் இவை சிறிய பனிக்கட்டிகளைக் கொண்டு இருக்கிறது. நீர்த் திவலைகளை இவை கொண்டிருப்பதில்லை.
நல்ல வெயில் வானம் பளிச்சென இருக்கும் மிதவானிலை நிலவும் நாளில் இவற்றைப் பார்க்கலாம். சமயங்களில் வெப்ப அலை வருவதற்கு முன்பும், புயல் அல்லது மழை வருவதற்கு முன்பான காலங்களிலும் இவை வானத்தில் கீற்றிடும். ஆகவே இவற்றை காணும் மாத்திரமே முடிவு செய்துவிடலாம் அடுத்ததாக மழை வர இருக்கிறது என்று.

நாசா புவி தரவு இணையதளம்  இம்மேகங்களைக் குறித்த ஒரு பழமொழியை சொல்லுகிறது. Mare's tales and mackerel scales make lofty ships to carry low sails. அதாவது சிர்ரஸ் மற்றும் அல்டோகுமுலஸ் மேகங்கள் வந்த பின்பான வானிலை பெரிய கப்பல்களை வேகம் குறைத்து இயங்கச் செய்து விடும் என்பதாம்.


8. சிர்ரோகுமுலஸ் (Cirrocumulus)
வரிவரியாக சிறிய சிறிய கீற்றுகள் ஆக, வெண்ணிறத்தில் வளிமண்டல மேல் அடுக்கில், பனிக்கட்டிகளைக் கொண்டு காணப்படுபவை இவை. இவ்வகை மேகங்கள் அல்டோகுமுலஸ் மற்றும் ஸ்றேடோகுமுலஸ் மேகங்களை விட அளவில் சிறியதாக நெல்மணிகளை போல இருக்கும்.
இவ்வகை மேகங்கள் அரிதானவை மற்றும் குறைந்த நேரமே வானில் தென்படும். குளிர் காலத்திலும் நல்ல/மித வானிலை நிலவும் நாட்களிலும் இவற்றை பார்க்கலாம்.


9. சிர்ரோஸ்றேடஸ் (Cirrostartus)
ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட வெண் நிற மேகங்களான இவை வானத்தை முழுவதுமாக மூடும் தன்மை கொண்டவை. சூரியனை சுற்றியோ அல்லது நிலவைச் சுற்றியோ ஒளி வட்டத்தை நாம் காணும் பொழுது இந்த வகை மேகங்கள் இருக்கின்றன என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒளிவட்டம் எப்படி உருவாகிறது எனில், சூரிய ஒளிக்கதிர்கள் இவ்வகை மேகங்களில் இருக்கும் பனித்துகள்களில் பட்டு ஒளிவிலகல் அடைவதால் தோன்றுகிறது. வளிமண்டல மேல் அடுக்கில் மிக அதிகமான அளவு ஈரப்பதம் இருக்கும் பொழுது இவை உருவாகின்றன. கோடை வரவிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி யாகவும் இவ்வகை மேகங்களைச் சொல்லலாம்.

கீழே நான் ஒரு படத்தை இணைத்துள்ளேன். அது சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லைக்கு அருகில் இருக்கும் குருதோங்மர் ஏரிக்கு சென்ற பொழுது எடுத்த படம். இப்படி ஒரு காட்சியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அன்று சூரியனை சுற்றி ஒளிவட்டத்தை உருவாக்கியது இந்த மேகங்கள் தான் எனத் தெரிந்திருக்கவில்லை.


10. குமுலோம்பினஸ் (Cumulonimbus)
வளிமண்டல கீழ் அடுக்கில் தொடங்கி நடு மற்றும் மேலடுக்கு வரை உயர்ந்து காணப்படும் அரிய வகை மரங்கள் இவை. இவை குமுலஸ் மேகங்களைப் போலவே உருவாகி கோபுரம் போல மேலெழுந்து காலிஃப்ளவர் வடிவத்தை அடையும். இவ்வகை மேகங்களின் உச்சிப் பகுதி எப்பொழுதுமே இறகுகளை போல தட்டை ஆகிவிடும். கீழ்ப்பகுதி ஒப்பீட்டளவில் அடர் நிறத்துடன் இருக்கும்.
இவை பொதுவாக இடி மழை மேகங்களாம். இவற்றைப் பார்த்தால் உறுதியாக சொல்லி விடலாம் இன்று ஆலங்கட்டி மழை அதாவது பனிக்கட்டி விழ இருக்கிறது என்று. சமயங்களில் டொர்னடோ எனப்படும் சூறாவளிக்கு முன்னதாகவும் இது தோன்றும்.


Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

குருக் மொழி - தமிழின் தங்கை