குருக் மொழி - தமிழின் தங்கை

சில நாட்களுக்கு முன்னர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழா? தமிழ் போன்ற மொழியா?

இந்தக் கேள்விக்கான பதில் இன்று இதோ.
நம் எல்லோருக்கும் தெரியும் இந்தியாவிலேயே இரு முக்கிய மொழிக்குடும்பங்கள் இருக்கின்றன. ஒன்று திராவிட மொழி குடும்பம் மற்றொன்று இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்.  தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாக இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் வெறும் தென்னிந்தியாவில் மட்டும் அல்லாது மத்திய இந்தியாவிலும் மற்றும் வட இந்தியாவிலும் பேசப்படுகின்றன. எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்தாலும் அந்த மொழிகள் சொல்லத் தக்கவையே! திராவிட மொழிக் குடும்பத்தில் வட பிரிவில் இருப்பது பிராகுயி, மால்தோ, குருக் போன்ற மொழிகள் தான்.  இதிலே பிராகுயி மொழி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல உள்ள மால்தோ மொழி மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்மஹால் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களால் பேசப்படுகிறது. குருக் மொழி கடைசியாக வருகிறது.

குருக் மொழி:

நான் கேட்ட கேள்விக்கான பதில் இந்த குரூக் மொழிதான். எங்கள் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் பெயர் ஷிவ்டோப்போ. டோப்போ எனப்படுவது ஓரன் இனக்குழுவினரின் சர்நேம். எதேச்சையாக பேசிக்கொண்டிருந்த பொழுது என்னுடைய மேலதிகாரி அந்த நபரை சுட்டிக்காட்டி சொன்னார், 'இவருடைய மொழியும் உங்களது பங்காளி மொழிதான். அது ஒரு திராவிட மொழி' என்றார். அந்த நபருக்கும் தான் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததுதான் என்பது தெரிந்திருக்கவில்லை.  அதன்பிறகு அதைக்குறித்து தேடத் தொடங்கினேன்.

படம்: கல்கத்தாவில் குருக் இன மக்களின் போராட்டம்

ஓரன் மற்றும் கிசான் இனக் குழுவினரால் இம்மொழி அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் தாய் மொழியாகும் இது. ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் பரவியிருக்கும் இந்த இனம் மக்களின்  23 லட்சம் பேர்களால் இந்த மொழி பேசப்படுகிறது.  யுனெஸ்கோ இந்த மொழியை அழிந்து வரும் மொழிகளுள் ஒன்றாக அறிவித்திருக்கிறது. வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த பொழுது பல இடங்களிலும் தங்கிவிட்டார்கள். அதிலே ஒரு பகுதியினர் இங்கே ஜார்க்கண்ட் மாநிலத்தில் வந்து தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அந்தவகையில் திராவிட மொழி குடும்பங்களுடன் குருக் மொழி இணைப்பைப் பெற்று இருக்கிறது. 


தொடக்கத்தில் சமஸ்கிருதம் இந்தி மராத்தி போன்ற மொழிகளை எழுத பயன்படும் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்த இந்த மொழிக்கு நாராயண் ஓரன் என்பவர் தோலோங் சிக்கி என்ன படம் வரிவடிவத்தை 1999ல் உருவாக்கி உள்ளார். பல புத்தகங்களும் இந்த வரி வடிவத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநில அரசு இந்த வரிவடிவத்தை அங்கீகரித்திருக்கிறது. அண்மையில் மேற்கு வங்காள அரசு தன்னுடைய அரசு மொழிகளில் ஒன்றாக இந்த மொழியை அறிவித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில அரசும் கல்வி மற்றும் செய்தி வெளியீடு செய்வதை இந்த மொழியில் மேற்கொண்டு வருகிறது. குருக் மொழியில் கல்வி பயிற்றுவிக்கும் பல பள்ளிகள் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களை உள்ளடக்கிய சந்தால் பர்கானா பகுதியில் இயங்கி வருகின்றன. குருக் மொழியை ஒரு மொழிப்பாடமாக ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் பயிற்றுவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் குருக் மொழிக்கான உயராய்வு நிறுவனம் அமைந்து இருக்கிறது.

குருக் எழுத்துமுறை

தமிழ் மொழிக்கும் குருக் மொழிக்குமான தொடர்புகளை ஆராய்ச்சி செய்ய பெரிய அளவில் யாரும் முன்வரவில்லை எனினும் மேலோட்டமான ஆய்வில் பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன. தமிழ்மொழிக்கும் குருக் மொழிக்குமான இலக்கண ஒற்றுமை மற்றும் சொல் ஒற்றுமை 50 விழுக்காட்டிற்கு மேலாக இருக்கின்றன.

படம்: தோலோங் சிக்கி எழுத்து முறை

தமிழின் எண்களையும் குருக் மொழியில் எண்களையும் கீழே காண்போம்.

எண் - தமிழ் - குருக்
1 - ஒன்று - ஒன்ட
2 - இரண்டு - இண்டின்
3 - மூன்று - மூன்ந்
4 - நான்கு - நாக்ஸ்
5 - ஐந்து - பஞ்சே
6 - ஆறு - சொய்ய
7 - ஏழு - சட்டே
8 - எட்டு - அட்டே
9 - ஒன்பது - நைம்யே
10 - பத்து - தஸ்ஸே

ஐந்திலிருந்து 10 வரையிலுமான எண்களை குருக் மொழி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து கடன் வாங்கி இருக்கிறது.

சில வாக்கியங்களை காண்போம்.
நீங்கை என்டர் நேம் ஹைகே ? - உங்களின் பெயர் என்ன?
நின் எக்கசே ராதீன்? - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? (பெண்)
நின் எக்கசே ராதை? - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (ஆண்)
இக்யா கால்கதீன்? - எங்கே போகிறீர்கள் (பெண்)
இக்யா கால்கதை? - எங்கே போகிறீர்கள் (ஆண்)
என்ற மஞ்ச? என்ன நடந்தது?
என் உண்ண லக்தன் - நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீன் மூக்க - நீ சாப்பிடு.
ஆர் உண்ண லக்னர் - அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சில ஆண்டுகள் முன்பு ராஞ்சி பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் குருக் மொழி தொடர்புகள் பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தியது. அதில் கலந்து கொண்ட அலகாபாத்தைச் சேர்ந்த பாஷா சங்கம் அமைப்பின் தலைவர் தமிழ் புலவர் மு.கோவிந்தராஜன் சொல்லுகையில், 'தமிழில் பூ என்பது Flower ஐ குறிக்கும். அதேபோல குருக் மொழியில் பூப் என்பது Flower ஐ குறிக்கும்.
நாளை இன்று தமிழில் வழங்கப்படுவது குருக் மொழியில் நாளே என்று புழங்குகிறது. அதேபோல தமிழில் நாம் சுட்டுவதற்காக பயன்படுத்தும் அது இது என்ற சொற்கள் அதே பொருளில் குருக் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன' என்று பேசினார்.

குருக்மொழிக்கும் தமிழுக்கும் ஆன தொடர்புகளை குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்கள் முன் வந்தால் நான் அவர்களை இங்கே ஜார்க்கண்ட் மாநிலத்தில் குருக் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கும், ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்