புயல்கள் ஏன் எதிர் கடிகாரத் திசையில் சுழல்கின்றன ?


    அண்மையில் நிவர் புயல் தமிழகத்தைப் பலமாக தாக்கி, இப்போது வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர மாநிலத்தில் நிலைகொண்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது உண்மைதான் என்றாலும் வட மாவட்டங்கள் மற்றும் ஒருசில டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இது ஏன்? ஆனால் எதிர்மறையாக ஆந்திரப்பிரதேசம் நல்ல மழை பொழிவை பெற்றிருக்கிறது. 

புயலின் சுழற்சியை பொறுத்தே மழை பொழிவு அமையும். பொதுவாக வட அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் எதிர் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும் சுழல்கின்றன. அப்படி வட அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையில் புயல்கள் சுழல்வதால் தமிழகத்தை இப்படிப்பட்ட புயல்கள் தாக்கும் பொழுது செயற்கைக்கோள் படங்களின் மூலமாக அவற்றை நோக்கினால் தெளிவாக ஒன்று புலப்படும். வங்கக் கடலில் சென்னையில் இருந்து அல்லது புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கில் ஒரு புயல் இருப்பதாக கணக்கில் கொள்வோம். அந்தப் புயல் எதிர் கடிகார திசையில் சுற்றும் பொழுது வங்கக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை இழுத்து சென்னை உள்ளிட்ட வடக்கு தமிழக கடற்கரைக்கு பலத்த மழைபொழிவைத் தருகிறது. 


நிவர் புயல் வான் படம் 

இப்பொழுது இதே புயல் கடிகார திசையில் சுற்றுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது டெல்டா மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மழையைத் தரும்.  காற்றின் சுழற்சி கடிகார திசையில் அமைவதால், சென்னை பகுதி கடலின் ஈரப்பதத்தை இழுத்து அதை தென் தமிழகம் நோக்கி புயல் செலுத்தும். ஒருவேளை இப்படி தமிழகத்தை தாக்கும்  புயல்கள் அனைத்தும் அமைந்துவிட்டால் ஏறக்குறைய மொத்த தமிழகமும் மழைமிகு மாநிலமாக மாறிவிடும். ஆனால் அதுதான் நடக்காதே! 


ஏன் என்ற கேள்வி எழுகிறதா? புயல் ஏன் எதிர் கடிகார திசையில் சுற்றுகிறது என்கிறீர்களா?


காரணம் கூறியவர் நானல்ல. பிரஞ்சு கணிதவியலாளர் கஸ்பாட் குஸ்டவே டி கொரியாலிஸ். பெரிய பெயராக இருக்கிறது, நாம் சுருக்கி அவரை செல்லமாக கொரியாலிஸ் என்று அழைப்போம். அவர் கூறிய கூற்று கொரியாலிஸ் விசை என்று அழைக்கப்படுகிறது. 


நமக்குத் தெரியும், நமது புவி கோள வடிவமானது. சூரியனை ஒரு ஆண்டில் முழுமையாக ஒரு சுற்று சுற்றி வருகிறது அதோடு தனது அச்சில் தானும் சுழல்கிறது. இப்படிப்பட்ட கோள வடிவ பொருள் தானும் சுழன்று வேறு ஒரு பொருளை சுற்றிவருவதாக கருதுவோம். இல்லை அது கடினமாக இருந்தால் வீட்டில் குளோப் இருக்குமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த குளோபை சுழற்றி விடும்பொழுது குளோபின் மையப்பகுதி குளோபின் துருவப் பகுதிகளை விட அதிக தொலைவு பயணிக்க நேரிடும். அப்படி பயணிக்க வேண்டி இருப்பதால் மையப்பகுதி வேகமாக செல்லும். அதே துருவப் பகுதிகளை நோக்கி நகரும் உள்ளது அவை பயணம் செய்ய வேண்டிய தொலைவு குறைவு. 


எளிமையான ஒரு எடுத்துக்காட்டு: இப்போது நாம் கன்னியாகுமரியில் இருந்து டெல்லியை நோக்கி ஒரு காகித ராக்கெட்டை செலுத்துவதாக கருதுவோம். அது நேரடியாக தில்லியை சென்று சேர வேண்டும். ஆனால் அப்படி செல்வதில்லை. அந்த ராக்கெட் கிழக்கே காசிக்கோ அல்லது பட்னாவிற்கோ சென்றுவிடும். காரணம் புவி சுழல்வது தான். மையப் பகுதியில் அதிக வேகத்தில் இருப்பதால் அங்கிருந்து செல்லும் ராக்கெட் வடபகுதிக்கு செல்லும் பொழுது இலக்கை விட முன் சென்று விடுகிறது.


இது போன்ற ஒரு செயல்முறையை, நாம் தென் அரைக்கோளத்தில் செய்வதாக கருதுவோம். தென்னமெரிக்காவில் உள்ள கயானாவிலிருந்து அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ்க்கு ஒரு காகித ராக்கெட் செலுத்தினால் அது கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று விழுந்து விடும். இதற்கும் அதே விதிதான்.


கொரியாலிஸ் விசைப்படி பூமியின் மேற்பகுதியில் சுழலும் நீர்மம் நேர்கோட்டில் ஆன பாதையை பின்பற்றுவது இல்லை.

ஒரு புயல் உருவாகும் பொழுதும் இதே தான் நடக்கிறது. புயலின் மையம் வெற்றிடம் போல குறைந்த காற்றழுத்த பகுதியாக இருக்கும். இது வெளிப்புறத்திலிருந்து அதிக அழுத்தம் கொண்ட காற்றை இழுக்கும். அப்படி இழுக்கப்படும் காற்றானது நேர்கோட்டில் வராமல் சற்று திசை திருப்பப்படுகிறது. இது வலப்புறமாக அல்லது இடது புறமா என்பதை வைத்துதான் புயலின் சுழற்சி அமைகிறது. வட அரைக்கோள பகுதியில் இடது புறம் வளையும் காற்றானது என் அறைக்குள் அப்பகுதியில் வலதுபுறம் வளைகிறது. விளைவு இரு இடங்களிலும் எதிரெதிர் திசையில் புயல் சுழல்கிறது. 


எதிர் கடிகாரத் திசையில் சுற்றும் 2018இல் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் 


கடிகாரத் திசையில் சுற்றும் தென் அரைக்கோளத்தின் ஹரோல்ட் புயல்.


மேலும் குறிப்பாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் புயல்கள் உருவாவதில்லை. நில நடுக் கோட்டிலிருந்து வடக்கு மற்றும் தெற்கில் 5 டிகிரிக்கு உள்ளான இடங்கள் வெப்ப வலய பகுதி என அறியப்படுகிறது. புயல் தாக்கப்பட்டாமல் வசிக்க வேண்டுமென்றால் இந்த பகுதியில் நீங்கள் வாழலாம். புயல் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லை. 


இவ்வளவு நேரம் நான் சொல்லியது புரியாமல் இருந்தால் கீழே உள்ள காணொளியைக் காணவும். எளிமையாக புரியும்.

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை