கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள்
கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள்
- சு.முத்துக்குமார் 07.09.2020
சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்பு கடலடி கேபிள் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. நாம் எல்லோரும் படித்திருப்போம். சரி உலகமெங்கும் எப்படி இதைச் செய்கிறார்கள் இதன் பயன் என்ன? கடலடி என்றால் எவ்வளவு ஆழத்தில் எப்படி பதிக்கிறார்கள் என்பதை யோசித்திருக்கோமா? இல்லை என்றால் கவலை இல்லை. இப்போது யோசிக்கலாம். வாருங்கள்.
ஒருகாலத்தில் கடலடியில் தகவல்களை பரிமாற்ற உலோக கம்பி வடங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைய தேதியில் முழுவதும் கண்ணாடி ஒளி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் இதைப் பார்ப்போம்.
கண்ணாடி ஒளி இழைகள்:
பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம், கண்ணாடி ஒளி இழைகள் தகவல்களை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளி அலைகளின் மூலமாக எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. கண்ணாடி ஒளி இழைகள், ஒளி அலைகளை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்ற காரணத்தினால் தான் இதனது பயன்பாடு அளப்பரியதாக இருக்கிறது. இந்த பேரண்டத்திலேயே வேகம் கூடியது எதுவென நமக்குத் தெரியும், ஒளியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக ஒளியின் வேகத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்வதால் தான் கண்ணாடி ஒளி இலைகளுக்கு மவுசு அதிகம். உலகம் முழுக்க அனைத்துவிதமான தகவல் பரிமாற்றங்களும் அதாவது இணைய பயன்பாட்டிற்கு உதவும் கம்பி வடங்கள் அனைத்தும் கண்ணாடி ஒளி இழைகளே. இதில் நடுவில் ஒரு கண்ணாடி இழை/இழைகள் இருக்கும் அதை சுற்றிலும் ஒரு காப்பு உறை இருக்கும். இந்த கண்ணாடி இழைகளின் ஊடாக முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின் அடிப்படையில் தகவலானது கடத்தப்படும். இவ்வாறு கடத்தப்படுவதால் இதில் இழப்பு மிக மிக குறைவு. இல்லை என்று கூட நாம் வைத்துக் கொள்ளலாம்.
ஏன் கண்ணாடி ஒளி இழைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு பதிலாக,
- எண்ணற்ற தகவல்களை கடத்துவதற்கு உதவுகின்றன,
- இவற்றின் கடத்தும் திறன் மிகவும் அதிகம்,
- தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு,
- வெப்பத்தை உமிழ்வதில்லை,
- குறுக்கீடுகள் மற்றும் மின்காந்த அலைகளினால் பாதிக்கப்படுவதில்லை
ஆகிய காரணங்களைச் சொல்லலாம்.
கண்ணாடி ஒளியிழை |
கண்ணாடி ஒளி இழைகள், பலவகை பாதுகாப்பு அடுக்குகள் மற்றும் துணை அடுக்குகளை பெற்றிருக்கும். கண்ணாடி ஒளி இழையைச் சுற்றி, யூரித்தேன் ஆல் ஆன ஓரடுக்கு அமையும். அதையொட்டி செம்பால் ஆன ஒரு அடுக்கு இருக்கும், அதன் வழியே நேர் மின்சாரம் பாயும். பின்னர் மீண்டும் பாலிகார்பனேட் ஆல் ஆன ஒரு அடுக்கும், அதனை அடுத்து தேவைப்படும் இடங்களுக்கு ஏற்ப கூடுதல் அடுக்குகள் அமையப்பெறும். எஃகு கம்பி அடுக்கு, பாலித்தீன் அடுக்குகள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த கூடுதல் அடுக்குகளின் முக்கிய நோக்கம் கண்ணாடி ஒளி இழைகளைப் பாதுகாப்பதுதான்.
கடலடி கம்பித்தட வரலாறு:
1858ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டத்தையும் வட அமெரிக்காவை யும் இணைக்கும் தந்திக் கம்பித்தடம் தான் கடலடியில் பாதிக்கப்பட்ட முதல் கம்பித்தடமாகும். இரு கண்டங்களுக்கும் இடைப்பட்ட நான்காயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு கடலடியில் இந்த கம்பி தடம் பதிக்கப்பட்டது. இதை கடலடியில் புதைப்பதற்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பிடித்தது. பதிக்கப்பட்ட பின் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அவர்கள் வாழ்த்துச் செய்தியை இப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் புக்கனன் அவர்களுக்கு அனுப்பினார். அதைத்தொடர்ந்து நியூயார்க் நகரில் படை அணிவகுப்பு நடந்தது. அப்போது அந்தச் செய்தி அமெரிக்காவை வந்தடைய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. ஒரு எழுத்துக்கு இரண்டு நிமிடங்கள் ஐந்து வினாடிகள் என்கிற வேகத்தில், இங்கிலாந்திலிருந்து நியூயார்க்கை 17 மணி நேரம் பயணித்து வந்தடைந்தது. பின் 1866 இல் புதிதாக பதிக்கப்பட்ட கம்பித்தடத்தின் மூலமாக ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 8 வார்த்தைகளை அனுப்ப முடிந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் இது 40 வார்த்தைகள் ஆக உயர்ந்தது.
இருபதாம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் வளர வளர, 1956-இல் ட்ரான்ஸ் அட்லாண்டிக் நம்பர் ஒன் என்கிற முதல் கடலடி தொலைபேசி கம்பி தடம் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தனது சேவையை தொடங்கியது. பின்னர் 1988இல் ட்ரான்ஸ் அட்லாண்டிக் நம்பர் 8, வினாடிக்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் தகவல் பரிமாற்ற சேவையை கண்ணாடி ஒளி இழைகளின் மூலமாக தரத் தொடங்கியது.
அண்மையில் 2018 இல், மரியா கடலடித் தடம் ஸ்பெயின் நாட்டின் பிபாவ் மற்றும் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திற்கும் இடையில் அதிவிரைவு தகவல்பரிமாற்ற இணைப்பை செயல் ஆக்கியது. இதன் வேகம் வினாடிக்கு 160 டெராபிட்ஸ் ஆகும். இது சாரசரி அமெரிக்க வீட்டு இணையதள வேகத்தை விட 16 மில்லியன் மடங்கு அதிகமானது.
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 350 க்கும் மேலான கடலடித் கண்ணாடி ஒளியிழைத் தடங்கள், 12 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலடியில் புதைந்து கிடக்கின்றன. இன்றைய நவீன கம்ப்யூட்டர் காலத்தின் மிக முக்கிய வசதியான இணையதளம் பல்கிப் பெருக இந்த வகை கடலடித் தடங்களே முன் நிற்கின்றன. இவற்றை புதைக்க முகநூல் கூகுள் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் நிதி அளிக்கின்றன. மணிக்கு ஒரு முறை வாட்ஸ்அப் அப்டேட் செய்து கொண்டிருக்கும் நாம் இந்த கடலடித் தடங்களை பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இவை இல்லையென்றால் உலகின் ஒரு பகுதி தகவல் மற்றொரு பகுதியை அடைவது இயலாது போய்விடும். இணையத் தொடர்பு துண்டிக்கப்படும் பொழுதுதான் நாம் இவற்றைப் பற்றி கேள்விப்படவே செய்வோம். அதுவரையிலும் நமக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பது இல்லை.
கேபிள் 'படும்'பாடு:
கடந்த 2012இல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை சாண்டி என்கிற புயல் தாக்கிய பொழுது வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான பல கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. பல மணி நேரங்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இணைப்பு கொடுக்கப்படவில்லை. மாற்று கேபிள்கள் மற்றும் ஏற்கனவே இருந்த கேபிள்கள் சரிசெய்யப்பட்டு நியூயார்க், நியூஜெர்சி நகரங்கள் மீண்டும் ஆன்லைனுக்கு வந்தன. அனைத்து கேபிள்களும் நியூயார்க் நியூ ஜெர்சியை மையம் கொண்டிருப்பதை தவிர்ப்பதற்காக, 2018ல் பதிக்கப்பட்ட மரியா கேபிள் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து கடலுக்குள் சென்றது. வழக்கமாக இங்கிலாந்திலும் பிரான்சிலும் சென்று அந்த கேபிள் இணையாமல், ஸ்பெயினில் முடிவடைந்தது.
புயல் தவிர கடல் நீரோட்டங்கள், பாறைச் சரிவுகள், சுறாமீன்கள், கடலடி படுகை உயர்தல் போன்ற இதர இயற்கை காரணங்களும் கேபிள்கள் துண்டிக்கப்பட காரணமாகின்றன.
இயற்கை மட்டுமல்ல மனிதனாலும் தொந்தரவு பல வகைகளில் வருகிறது. கடல் ஆழத்தில் இருக்கும் கேபிள்கள் ஓரளவு பாதிப்பிலிருந்து தப்பினாலும், எங்கே கடற்கரையை நோக்கி உயர்கிறதோ அந்த இடங்களில் பாதிப்புகள் அதிகமாகின்றன. மீன்பிடிக் கப்பல்கள் இந்த இடங்களில் தான் அதிகம் உலவுகின்றன என்பதால் அவற்றின் நங்கூரங்கள் கேபிள்களை அழித்துவிடுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு பாதிப்புகள் இந்த வகை நங்கூரங்கள், இழுவைப் படகுகள், மீன்பிடி வலைகளினால் தான் ஏற்படுகின்றன.
எப்படி கேபிள்கள் கடலின் அடியில் புதைக்கப்படுகின்றன?
சாதாரணமாக சாலைகளின் ஓரங்களில் கேபிள் புதைப்பதற்கு மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில் கடலடி கோவில்கள் அமைக்க ஆண்டுக்கணக்கில் நேரம் பிடிக்கிறது. நேரம் மட்டுமல்ல செலவும் அதிகம். மாலுமிகள் வைத்திருக்கும் கடல் வரைபடங்கள் மூலமாக முதலில் கேபிள் பதிக்கப்படும் வழித்தடம் கண்டறியப்படுகிறது. சிறந்த வழித்தடம் கண்டறியப்பட்ட பின் கேபிள் பதிக்கும் பணி துவங்குகிறது. எவ்வளவு ஆழத்தில் கேபிள்கள் புதைக்கப் படுகின்றனவோ அவ்வளவு பாதுகாப்பானது. கடல் அடியில் ஆழத்தில் புதைக்கும் பொழுது பொதுவாக பாதிப்புகள் மிகக் குறைவு. காரணம் முன்னரே நாம் சொன்னதுதான். கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்களில் இருந்து துவங்கும் கேபிள்கள் கண்ட சரிவுகளில் பதிக்கப்பட்ட பின் கடல் படுகையில் நன்கு ஆழமாக பதிக்கப்படுகிறது. பின் இது மீண்டும் உயர்ந்து மறுமுனையில் வேறொரு நாட்டின் கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் சென்று முடிவடைகிறது. இந்த நிலையங்களுக்கு லண்டிங் ஸ்டேஷன் என்று பெயர். கேபிள் பதிக்கும் சிறப்பு வகை கப்பல்கள் செல்லும் முன், கடல் படுகைகளை ஆராய்ந்து சொல்லும் வழிகாட்டி கப்பல் பயணிக்கும். இவை கடலடி நீரோட்டங்கள், எரிமலை பகுதிகள், கண்டத் திட்டுகளின் இணைப்பு பகுதிகள் ஆகியவற்றை தவிர்த்து நல்ல வழியை தேர்ந்தெடுத்து தரும். பின் அந்த வழியில் மிகப்பெரிய கேபிள் பதிக்கும் சிறப்பு வகைக் கப்பல்கள் பணியைத் தொடரும். கடலடி படுகை என்றால் எல்லா இடங்களிலும் ஒரே போல் இருக்காது. இவற்றின் ஆழம் கடலின் ஆழத்திற்கேற்ப வேறுபடும். சராசரியாக 2000 மீட்டர் முதல் 6000 மீட்டர் ஆழம் வரையிலும் போகலாம்.
2018ல் பதிக்கப்பட்ட மரியா கேபிள் 6600 கிலோ மீட்டர் நீளமும் 46 லட்சம் கிலோ எடையும் கொண்டிருந்தது. இது கிட்டத்தட்ட 34 நீலத்திமிங்கலங்களின் எடைக்குச் சமம்.
இந்தக் கப்பல்களில், வடத்தில் சுற்றப்பட்ட கிலோமீட்டர் கணக்கான நீளமான கண்ணாடி இழைகள் இருக்கும். கடலடியில் ஒவ்வொரு 25 மைல்களுக்கு அப்பாலும் கேபிள்களோடு, பெருக்கிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இவை கேபிள்களின் மூலமாக வரும் தகவல்களை மேலும் உந்தித்தள்ள பயன்படுத்தப்படுகிறது.
இந்த கப்பலில் இருந்து ஒரு புதைக்கும் இயந்திரம் கடலடிக்கு அனுப்பப்படும். இது நிலத்தை உழுவது போல் கடலடி மண்ணை ஒரு கால்வாய் போன்ற அமைப்பை உண்டாக்கி அதில் கேபிளைப் பதிக்கும்.
இந்த கருவி உடன் ஒரு கேமரா இணைக்கப்பட்டிருக்கும். அது கண்ணாடி இழை சரியாகப் பதிக்கப்படுகிறதா என்பதை மேலே இருந்து கண்காணிப்பவர்க்கு தெரிவிக்கும்.மேலும் ஒரு காந்தமானி கருவியின் கலப்பைக்கு பின்னால் கேபிள் சரியாகப் படுகிறதா என்பதை உறுதிசெய்யும்.
கேபிள் பதிக்கும் கப்பல் |
இந்தியாவில் கடலடி கேபிள்கள்:
இன்றைய தேதியில் என்னதான் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தாலும், மிக அதிக கடலடி கேபிள்களை கொண்டு இந்தியாவின் ஒரே உலகத்தர நிறுவனமாக டாட்டா தொலைத்தொடர்பு (டாட்டா டெலி கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனம் தான் விளங்குகிறது.
சென்னை அந்தமான் கேபிள் இணைப்பு வரைபடம் |
இந்தியாவிற்கு உலக தொலைத்தொடர்பை மொத்தம் 15 கடலடி கேபிள்கள் வழங்குகின்றன. ஒரேஒரு கேபிள் இந்தியாவிற்கு உள்ளாக தொலைத்தொடர்பு சேவை வழங்குகிறது. இந்தியாவில் மும்பை மற்றும் சென்னை நகரங்கள் பெரும்பாலான கடலடி கேபிள் இணைப்புகளை பெற்றிருக்கின்றன. மும்பை ஐரோப்பிய அரேபிய தீபகற்பம் ஆகிய பகுதிகளை நோக்கியுள்ள மேற்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் காரணத்தால் மிக முக்கிய நிலையமாக செயல்படுகிறது. சென்னை கீழைநாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை கடலடி கேபிள்கள் மூலமாக இணைக்கும் கிழக்குக் கடற்கரை நிலையமாக அமைந்திருக்கிறது. இவ்விரு நகரங்களைத் தவிர மூன்று நகரங்களில் கடலடி கேபிள் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. தமிழகத்தின் தூத்துக்குடி நகரம் இலங்கையின் கொழும்பு உடன் இணைப்பை பெற்று இருக்கிறது. இந்த கேபிள் முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களிலிருந்து மாலத்தீவுக்கு கடலடி கேபிள்கள் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் சென்னையிலிருந்து அந்தமானிற்க்கு கடலடி கேபிள்கள் பதிக்கப்பட்டதன் மூலமாக அதிவிரைவு இணையதள வசதியை போர்ட் பிளேயர் உள்ளிட்ட அந்தமான் நகரங்கள் பற்றி இருக்கின்றன. இந்த கேபிள் தான் இந்தியாவிற்கு உள்ளாக மட்டும் சேவை வழங்குவது. ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி வசதியை முதன்முதலாக அந்தமானில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கீழ்காணும் படத்தைப் பாருங்கள் புரியும்.
இந்தியாவில் கடலடி கேபிள் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அதன் வரைபடம் |
கேபிள் விவரங்கள் |
இவை தவிர புதுச்சேரியிலிருந்து புதிய கேபிள் இணைப்பு வழங்குவதற்கு ஐஓஎக்ஸ் நிறுவனம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. மேலும் ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட என்எல்சி நிறுவனம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் கூட்டு இணைந்து ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடலடி கேபிளை பதிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறது. இது ஜப்பானில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வழியாக இந்தியாவின் மும்பை மற்றும் சென்னை நகரங்களை இணைக்கும். இதன் கடத்துதிறன் வினாடிக்கு 300 டெராபிட்ஸ் அளவில் இருக்கும் என்ன கூறியிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ஐஏஎஸ் மற்றும் ஐஇஎக்ஸ் என்கிற இரு புதிய கேபிள் இணைப்புகளை கட்டமைக்க போவதாக அறிவித்திருக்கிறது. இணைய பாதுகாப்பு கேள்விக்குறியாகி கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சொந்த கேபிள் தடங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என!
Very nice information...
ReplyDeleteGreat....
ReplyDeleteஆழத்தில் புதையுண்ட தகவல்கள் வெளியில் கிடைக்கப்பெற்றது .... நன்றி
ReplyDelete