இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?


நாம் பள்ளிக்கூடங்களில் இந்தியை ஒரு பாடமாக படித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சங்கிகள் சொல்வது போலயே ஒருவேளை நீங்கள் வட இந்தியா வர நேரிட்டால் பள்ளிக்கூடத்தில் படித்த இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு மதிப்பீடு செய்தால் அதிகபட்சம் 10-20 சதவிகிதமே வரும். 


ஏனெனில் நீங்கள் இந்தியில் எழுத போவதோ வாசிக்கப் போவதோ இல்லை. மொழியின் நான்கு கூறுகளில் இரண்டு முதலிலேயே அவுட். அடுத்து வரக்கூடிய பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரண்டும் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இன்றைய தேதியில் வட இந்தியாவிலும், கிராம பகுதிகளை தவிர நகரங்களில் ஆங்கில கலப்பு இந்தியையே பயன்படுத்துகிறார்கள். 
சான்றாக பேருந்து எத்தனை மணிக்கு வரும்? என்பதை Bus ka timing kya hai? என்றால் பதில் சொல்லிவிடுவார்கள். கூட்டி கழித்து பார்த்தால் ஒரு ஐநூறு ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் போதும் நீங்கள் இந்தியில் பேசி வட இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிடலாம். தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தமாக வேலை நிமித்தமாக செல்லக் கூடியவர்கள் பெரும்பாலும் நகரங்கள் பெரு நகரங்கள் மாநகரங்களுக்கே செல்கிறார்கள். எங்கோ கிராம பகுதிக்கு சென்று எவரும் வேலை பார்க்கப்போவது இல்லை!


தமிழகத்தைப் போலவே இங்கேயும் பல ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான இந்தி வார்த்தைகள் தெரியாத பலர் இருக்கிறார்கள். இந்தி மீடியத்தில் படித்து வரும் ஆட்கள் மட்டும்தான் இந்தியில் புலமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். 
மிகவும் முக்கியமாக நம்மைப்போன்ற தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு புலமைத்துவம் தேவையில்லை. பேசி காரியத்தை முடிப்பதற்கான அளவு இந்தி அறிவு இருந்தால் போதுமானது. இதற்காக நீங்கள் பள்ளியில் 5 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகள் இந்தியைப் படித்து நேரத்தை வீண் அடிக்க தேவையில்லை. அந்த நேரத்தை நீங்கள் அறிவியலிற்கோ கணிதத்திற்கோ பயன்படுத்தினால் மேற்படிப்பு படிப்பதற்கு உதவியாக இருக்கும். இந்திக்காரர்கள் யாரும் தென்னிந்திய மொழிகளை பள்ளிகளில் படிப்பது இல்லை. மும்மொழித் திட்டம் அமலில் இருக்கும் பள்ளிகளில் கூட சமஸ்கிருதம்தான் மூன்றாவது மொழியாக இருக்கிறது. 


அப்படி சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக பயின்றுவரும், பயின்று வந்த மாணவர்களிடமும் எனக்கு பழக்கம் இருக்கிறது. அவர்களால் சமஸ்கிருதத்தை எழுதவும் வாசிக்கவும் முடியும். ஆனால் பேசுவதற்கு இயலாது. சமஸ்கிருதமும் முழுமையாக சொல்லி தரப்படுவது இல்லை. ஓரளவு இடைநிலை சமஸ்கிருதத்தை தான் பள்ளிகளில் பயிற்றுவிக்கிறார்கள். மாணவர்கள் மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காகவே பாடத்திட்டமும் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 


சங்கிகள் சொல்வதுபோல அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் இந்தி‌ எப்படி கற்றுக் கொள்வார்கள் என்கிற வாதத்திற்கு பதிலாக நான் இதை முன் வைக்கிறேன். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் அவர்களது கனவாக எண்ணுவது மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ அல்லது மாநில அரசு மற்றும் மத்திய அரசுப் பணிக்கு செல்வதாகவோ தான் இருக்கிறது. அவர்களால் சிந்திக்கக் கூடிய கனவு இந்த அளவுதான். மற்றைய சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவோ ஆங்கில வழிப் பள்ளிகளைப் போலவோ ஐஐடி செல்ல வேண்டும் என்ஐடி செல்ல வேண்டும், அமெரிக்காவில் எம்எஸ் பயிலவேண்டும் என்பது போன்ற கனவுகள் பத்தாயிரத்தில் ஓரிருவருக்குத்தான் இருக்கிறது. அவன் முதலில் தமிழகத்திற்குள் இடம்பெயர்ந்து முன்னேறி வரட்டும். பின்பு தான் அவனது பார்வையை விரிவடைந்து மற்ற மாநிலங்களுக்கோ அல்லது நாட்டிற்கோ செல்வதற்கு முடியும். ஏழை மாணவர்களை கண்ணில் காட்டி ஒன்றுக்கும் உதவாத இந்தியை திணிக்க சங்கிகள் போட்டி போட்டு வருகிறார்கள். 




தற்போது சங்கிகள் விரித்து வரக்கூடிய இந்தி வலையில் நம்முடைய மாணவர்கள் விழாமல் தடுப்பது நமது தலையாய கடமையாகும். இதை நான் எங்கோ தமிழகத்தில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. வட இந்தியாவில் சொல்லப்போனால் கிழக்கு இந்தியாவில் மிகவும் பின்தங்கிய ஆங்கில அறிவு குன்றிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சொல்கிறேன்.


சு_முத்துக்குமார்

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை