அம்பானிகளின் நாடு
நடுவண் அரசு அண்மையில் 3 விவசாய சட்டங்களை இயற்றி இருக்கிறது அல்லது திருத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நடுவண் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் பெண் அமைச்சர் பதவி விலகி இருக்கிறார். பஞ்சாப் அரியானா மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் முணுமுணுப்புகள் கேட்கின்றன. சரி எதற்காக நடுவணரசு இவ்வளவு அவசரமாக இந்த மூன்று சட்டங்களை கொண்டு வருகிறது என்கிற கேள்வி எழுகிறது? அண்மையில் நடந்த நிகழ்வுகளையும், இந்த சட்டத்தையும் நாம் பொருத்திப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது. நடுவண் அரசு ஏறக்குறைய அம்பானி மற்றும் அதானி போன்ற பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கட்சிக்கு நிதி மட்டும் அளிக்கிறார்களா அல்லது அவர்களது கட்சியையே அல்லது அரசாங்கத்தை அவர்கள்தான் நடத்துகிறார்களா என்கிற கேள்விக்கு இன்றைய தேதியில் பதில் யாராலும் சொல்ல இயலும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ஃபியூச்சர் ரீடைல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. இந்நிறுவனம் நாடுமுழுவதும், ஆயிரத்திற்கும் மேலான பிக் பஜார் போன்ற பேரங்காடிகளை நடத்தி வருகிறது. அதானி தலைமையிலான அதானி குழுமம், உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் பார்ச்சுன் கம்பெனியை தன்வசம் வைத்திருக்கிறது. இதுபோக அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மார்ட் என்கிற இ-காமர்ஸ் தளத்தையும் தொடங்கி பிரபலப்படுத்தி வருகிறது.
சரி இப்போது இந்த சட்டத்திற்கு வருவோம். இந்த சட்டம் ஒப்பந்த முறை விவசாயத்தையும், விவசாய விளை பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடுகளையும், கட்டற்ற சேமிப்புக்கான ஆதரவையும் தருகிறது. இன்றுவரையிலும் பிக் பஜார் போன்ற பெரு நிறுவனங்கள் மொத்தமாக முறை பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை மதிப்புக்கூட்டி விற்பதற்கு இடையூறாக இதுவரை இருந்த விவசாய சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. இவற்றை நீக்குவது அந்நிறுவனங்களுக்கே பயனைத் தரும். இனிவரும் காலத்தில் சில்லறைக் கடைகள் எல்லாம் பிழைக்குமா? எல்லாவற்றையும் அம்பானியே விழுங்கி விடுவானா? என்ற மிகப்பெரிய ஐயம் எழாமல் இருப்போர் இந்நாட்டில் மிகக் குறைவு.
தொலைத் தொடர்புத்துறை ஏகபோகம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது உச்சநீதிமன்றம் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கான கட்டண பாக்கி தொகையை செலுத்துவதற்கு பத்தாண்டு காலம், காலநீட்டிப்பு செய்திருக்கிறது. அதில் ஏற்பட்ட அதேபோன்று பயமே இப்போது சில்லறை வணிகத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தால் ஆரோக்கியமானதாக இல்லை!
இனி இந்நாடு அம்பானிகளின் நாடு ஆகிவிடும் நாள் தொலைவில் இல்லை
Follow us @ fb.me/kuruvimedia
Comments
Post a Comment