ஐரோப்பிய வாகையர் ஆட்ட இறுதிப் போட்டி - சாதனைகள் பல கண்டு‌ பட்டம் பெற்ற பேர்ன் முனிச்!

லிஸ்பன் நகரில் நேற்று நடந்த 2019-20 ஐரோப்பிய வாகையர் ஆட்ட (சாம்பியன்ஸ் லீக்) இறுதி போட்டியில் ஜெர்மனியின் பேர்ன் முனிச் அணி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

ஆட்ட சுவாரசியங்கள்:

  • பேர்ன் முனிச் அணிக்கான கோலை கிங்ஸ்லே கோமன் அடித்து, அந்த அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் பெற்றுத் தந்திருக்கிறார்.
  • பேர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக வாகையர் பட்டம் சூடுகிறது. 2013க்கு பின் ஏழு ஆண்டுகள் காத்திருந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது.
  • பேர்ன் முனிச் அணி தான்‌ இன்று பெற்ற ஆறாவது பட்டத்துடன் வாகையர் ஆட்ட வரலாற்றில் அதிக முறை பட்டம் பெற்ற மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. [முதல் - ரியல் மாட்ரிட் (13முறை), இரண்டு - மிலன் (7முறை)]
  • பேர்ன் முனிச் அணி தான் பெற்ற ஒரு கோல் மூலமாக மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஐரோப்பிய வாகையர் ஆட்ட வரலாற்றில் 500 கோல்கள் அடித்த மூன்றாவது அணியாக இடம்பெற்று விட்டது.
  • பேர்ன் முனிச் அணிக்கு வெற்றி தேடித் தந்த கிங்ஸ்லே கோமன் எதிரணியின் சொந்த களமான பாரிசைச் சேர்ந்தவர் மற்றும் பிஎஸ்ஜி இளையோர் பயிற்சி நிலையத்தில் இருந்து வெளிவந்தவர்.
  • இந்த தொடரில் தான்‌ விளையாடிய 11 ஆட்டங்களிலும் வென்று எந்த அணியும் நிகழத்தாத சாதனையை பேர்ன் முனிச் அணி சாத்தியமாக்கி இருக்கிறது.
  • பேர்ன் முனிச் அணி ஐரோப்பிய முப்பட்டத்தையும் இரண்டு முறை பெற்ற இரண்டாவது அணியாக வரலாறு படைத்து இருக்கிறது. புண்டெஸ்லிகா, டி.எப்.பி - போக்கல் , ஐரோப்பிய வாகையர் ஆட்டம் ஆகிய மூன்று தொடர்களிலும் பட்டம் பெற்று மூன்று மகுடங்களை இந்த ஆண்டு தன் தலையில் சூடிக் கொண்டு இருக்கிறது. (முதல் அணி - பார்சிலோனா)
  • இரண்டு ஆண்டுகள் தனது காலில் அடைந்த காயம் மூலமாக பல வாய்ப்புகளை இழந்த பேர்ன் முனிச் அணியின் கோல் கீப்பரான 'மனுவேல் நோயர்', பிஎஸ்ஜி அணி நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் கோலைத் தடுத்து பிஎஸ்ஜி அணியை, வெற்றிக்கு தூரத்திலேயே வைத்து விட்டார். நோயர் தன்னுடைய மிகச்சிறந்த ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார். கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்த நாரை போல வந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி தன் மீள்வருகையை அட்டகாசமானதாக்கிவிட்டார். 
  • பட்டத்தை தவற விட்டிருக்கும் பிஎஸ்ஜி அணியை 2011ம் ஆண்டு தான் கத்தார் நாட்டு அரச குடும்பம் வாங்கி இருந்தது. பட்டத்தை அவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த நிலையில் ஏமாந்து போய் விட்டார்கள்.
  • ஐரோப்பிய கால்பந்து அணிக்கு தலைமை தாங்கிய முதல் பிரேசிலியனான, பிஎஸ்ஜி அணித் தலைவர் தியாகோ சில்வா வின் பிஎஸ்ஜிக்கான கடைசி ஆட்டமாக இது அமைந்தது. அவர் செல்சீ அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் பேசுகின்றன.

படத்தொகுப்பு:


கிங்ஸ்லே கோமன் 

கோப்பையுடன் பேர்ன் முனிச் அணி வீரர்கள் 


கோப்பையில் பேர்ன் அணிப் பெயர் பொறிக்கப்படுகிறது.


ஐரோப்பிய வாகையர் ஆட்ட தொடரில் இதுவரை பட்டம் பெற்ற அணிகள் ஆண்டு வாரியாக.


அட்டகாசமாக கோலை தடுக்கும் பேர்ன் அணியின் நோயர். 

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை