லெபனான்: திசை தெரியா பயணம்

லெபனான்: திசை தெரியா பயணம்
- சு. முத்துக்குமார் 07.08.2020

'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்பார்களே அதற்கு இன்றைய தேதியில் மிகப்பொருத்தமாக லெபனான் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் போதும் போதும் என இன்னல் மேல் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.


லெபனான், பன்னெடுங்காலமாகவே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஊனப்பட்டு கிடக்கிறது. இவை இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 70, 80 ஆண்டு காலமாகவே தொடர்ந்து வருகின்றன. விடுதலை பெற்ற பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுப் போர், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை, சிரியா போர் என நீண்டு இருக்கிறது பிரச்சினைகளின் பட்டியல். தற்பொழுது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி லெபனானை சூழ்ந்திக்கிற நிலையில், கொரோனாவும் பெய்ரூட்டில் நிகழ்ந்த பெருவெடிப்பும் வெந்த புண்ணில் வெகு ஆழமாக வேலைப் பாய்ச்சி விட்டுவிட்டன. இதிலிருந்து லெபனான் மீளுமா? என்பது மில்லியன் அல்ல பில்லியன் டாலர் கேள்வியே!
இந்தக் கட்டுரை லெபனானிற்குள்ளே தங்களை அழைத்துச் செல்லவிருக்கிறது. 


லெபனான் - மத்திய கிழக்கு ஆசியாவில், அரபு நாடுகளின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் சிரியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும் 10,462சதுர கிமீ பரப்பளவு கொண்ட மிகச்சிறிய நாடு. பரப்பளவின் அடிப்படையில் ஆசியக் கண்டத்திலேயே (தீவு நாடாக அல்லாமல்) மிகச் சிறிய நாடாகச் சொல்லப்படுகிறது. எடுத்துக் காட்டாக சொல்லவேண்டுமானால் இந்த நாடு இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் பரப்பளவை மட்டுமே கொண்டு இருக்கிறது. லெபனான் 'மத்திய கிழக்கு நாடுகளின் முத்து' என வர்ணிக்கப்படுகிறது. இது மத்தியதரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு இணைப்பு பாலமாக விளங்குகிறது. லெபனானின் ஊடாக ஒரு காலத்தில் எண்ணெய், உணவு தானியம், ஆடைகள், உலோகங்கள், மணிகள் என பல்வகை வணிகங்கள் நடந்திருக்கின்றன. 

Temple of Jupiter

 உலகின் மிகப்பழமையான நகராக சொல்லப்படும் பிபிலோஸ் நகரம் இந்த நாட்டில் தான் அமைந்திருக்கிறது. ரோமானிய பேரரசின் மிகப்பெரிய கோவில் லெபனானில் தான் இருந்தது. இன்று அதன் சிதைவுகள் மட்டும் காணக்கிடைக்கின்றன. மிக பிரபலமான வியாழன் கோவிலின் எஞ்சிய பகுதிகள் (Temple of Jupiter) பல போருக்கு இடையிலும் சிதையாமல் இன்றும் இருக்கின்றன. இந்த சிறிய நாட்டில் கிட்டத்தட்ட 55 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்களைத் தவிர சிறுபான்மையினராக 41% கிறிஸ்தவர்களும் 5% டிரூஸ் எனப்படும் மதத்தவர்களும் காணப்படுகின்றனர். பெருமளவு மக்களால் பேசப்படும் மொழியாக அரபு மொழி இருக்கிறது. 

லெபனான் அமைவிடம் 

அரபு நாடுகளை ஒட்டி அமைந்திருந்தாலும் இந்த நாட்டில் பெருமளவு கச்சா எண்ணெய் கிடைப்பது இல்லை. எனினும் மத்திய கிழக்கிலேயே நீர்வளம் மிகுந்த நாடாக விளங்குகிறது. லெபனான், பனிபடர்ந்த மலை முதல் கடற்கரை வரை நல்ல இயற்கை அமைப்பை பெற்று இருக்கிறது. அரபு நாடுகளிலேயே மிக அதிகமான அளவு விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலப்பரப்பை லெபனான் பெற்றிருக்கிறது. (கிட்டத்தட்ட 12.9% நிலப்பரப்பு). 


லெபனானின் பொருளாதாரம்: 
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018 கணக்கெடுப்பின்படி 54.1 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தனிநபர் சராசரி வருமானமாக ஆண்டிற்கு 12 ஆயிரம் டாலர் கொண்டு உயர் நடுத்தர வருமானம் உடைய பொருளாதாரமாக விளங்குகிறது. லெபனான் தொடக்க காலம் முதல் இன்றுவரை வணிக பற்றாக்குறை நாடாகவே அறியப்படுகிறது. 3.524 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சரக்கு மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யும் இந்நாடு 18.34 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. சேவைத்துறை நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக விளங்குகிறது.


பெய்ரூட்  பெரு வெடிப்பு:

என்னதான் பண்டைய காலம் தொட்டு சிறந்த வணிக பகுதியாக இருந்து இருந்திருந்தாலும் இன்றைய நிலைமைகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 
தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் இருந்த, சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கடந்த 5-ஆம் தேதி இரவு வெடித்துச் சிதறியதில் 170க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். காயம்பட்டோரின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றாலும், 6000 பேருக்கு குறையாமல் இருக்கும் என தெரியவருகிறது. இந்தப் பெரு வெடிப்பின் தாக்கம் 230 கிலோ மீட்டர் அப்பால் இருக்கும் சைப்ரஸ் தீவுகள் வரை உணரப்பட்டிருக்கிறது. மேலும் இதனால் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. 


சமூக வலைத்தளங்கள் முழுவதும், பெய்ரூட் நகரின் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலைபேசி கேமராக்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரும் காளான் வடிவ மேகம் போன்று கிளம்பிய புகை மற்றும் தீப்பிழம்பைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பிக் காணப்படுகின்றன. தீபாவளிக்கு வெடிக்கப்படும் அணுகுண்டு போல சில நிமிடங்களே நீடித்த இந்த வெடிப்பு சுமாராக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரை வீடற்றவர்களாக ஆக்கிச் சென்று இருக்கிறது. 


இந்தப் பெருவெடிப்பு ஏற்கனவே லெபனானில் கனன்று கொண்டிருந்த மக்கள் கோபத்திற்கு எண்ணெய் வார்த்து சென்றிருக்கிறது. பெய்ரூட் நகரின் மருத்துவமனை ஒன்றில் நிதி மேலாளராகப் பணியாற்றும் நபில் அல்லாம் 'எங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கிறது. எங்களுக்கு அரசியல் நெருக்கடி இருக்கிறது. எங்களுக்கு மருத்துவ நெருக்கடி இருக்கிறது மற்றும் தற்போது இது' என்ற அவர் மேலும் தொடர்கையில் 'இன்னும் எடுத்துக் கொள்ள எங்களுக்கு என்ன இருக்கிறது?' என்கிறார். 


பல வல்லுநர்கள் இதை லெபனானின் செர்னோபில் அல்லது லெபனானின் ஹிரோஷிமா என்று வர்ணிக்கிறார்கள். முதலில் இஸ்ரேலிய தொடர்பு கொண்ட தீவிரவாத இயக்கங்கள் இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது தெளிவாக தெரிய வந்திருக்கிறது, இது அரசின் நிர்வாகத்தில் இருப்போரின் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்று. பெய்ரூட் துறைமுகத்தில் 2014ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2, 750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததனாலேயே நிகழ்ந்திருக்கிறது.


1943இல் லெபனான் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு, 1975 முதல் 1989 வரை நடந்த உள்நாட்டுப் போரால் லெபனான் நிலைகுலைந்தது. தொடக்கம் முதலே இருந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையில், லெபனான் எந்த தலையீடும் செய்வதில்லை எனினும் இரு நாட்டிற்கும் இடையே அகப்பட்டுக் கொண்டதால் அதனுடைய தாக்கம் விடுதலை அடைந்ததில் இருந்து இன்று வரை நீண்டு கொண்டிருக்கிறது. இஸ்ரேலிய தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதும், பின்பு பாலஸ்தீன இயக்கங்கள் அதற்கு பதில் தாக்குதல் நடத்துவதும் ஆக லெபனான் அவர்களின் விளையாட்டு இடமாக மாறிப்போனது. ஏற்கனவே இருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை காணாது என்று கிழக்கில் இருக்கும் சிரியாவிலும் போர் மூன்று கொண்டதால் அது நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. சிரியாவில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் அகதிகள் 2010 முதல் இன்று வரை லெபானிற்குள் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையால் தஞ்சமடைந்த சில லட்சம் மக்களோடு இவர்களும் இணைந்து கொண்டனர். அரசு செயல்பட முடியாத நிலைக்கு மாறிப்போனது. என்னதான் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் மாறிமாறி கொல்லப்படுவதும் புதியவர்கள் ஆட்சிக்கு வருவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. நிலையான ஆட்சி இன்மையால் அரசினால் மக்களுக்கு தேவையான மிக அடிப்படையான கட்டமைப்பு வசதிகளான, குடிநீர், மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று உலகிலேயே மிக மோசமான இணைய வசதி கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இடையில் உள்நாட்டுப் போருக்கு முன்பு லெபனானின் ஆட்சியாளர், லெபனானியர்களை உலகம் முழுவதும் சென்று கல்வி கற்க ஊக்குவித்தார். பல நாடுகளுக்குச் சென்ற அவர்கள், இங்கு ஏற்பட்ட போரினால் திரும்பி வர இயலாத நிலைக்குள்ளாகி அந்தந்த நாடுகளிலேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கிவிட்டனர். இன்று அவர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் மட்டுமே (remittance) பொருளாதாரத்தில் 10% அளவுக்கு பங்கு வகிக்கிறது.

பொருளாதார சீர்குலைவு:

கடந்த ஆண்டு லெபனானின் வங்கிகள் அமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவு, ராக்கெட்டைப் போல உயர்ந்த பணவீக்கம் பெரும் மக்கள் கிளர்ச்சியை உண்டாக்கியது. இது அனைத்தும் கொரானா வருகைக்கு முன்பாக நடந்தது. உலக வங்கி கணிப்பின்படி கிட்டத்தட்ட 45% லெபனானின் குடிமக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பொருளாதார சீர்குலைவைத் தொடர்ந்து வந்த கொரானா மற்றும் அதனால் விளைந்த ஊரடங்கு பாதிப்பை இன்னும் தீவிரமாக்கி விட்டிருந்தது. உலக நிதி நிறுவனம், இந்த ஆண்டு லெபனான் பொருளாதாரம் 12% அளவுக்கு விழும் என்று சொல்லி இருந்த நிலையில் இந்த பெருவெடிப்பு அந்த எண்ணை இன்னும் எத்தனை % கீழே இழுக்குமோ தெரியவில்லை. 2000மாம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகளாகவே லெபனான் அரசு, தனது நடவடிக்கைகளின் மூலமாக ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பை 1507.48 என்பதிலிருந்து கீழே விழாமல் தக்க வைத்துக் கொண்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டு, இது சரசரவென கீழே இறங்கத் தொடங்கியது. 2020 ஏப்ரலில் கிட்டத்தட்ட 3000 லெபனான் பவுண்டை கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடியும் என்கிற நிலைமை வந்துவிட்டது. லெபனான் தன்னுடைய இருப்புக்கு பெருமளவு இறக்குமதியை சார்ந்து இருப்பதால் உணவு பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறத்தொடங்கியது. உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென 80% உயர்ந்து விட்டது இந்த ஓராண்டு காலத்தில். கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த கடன் 92 பில்லியன் டாலராக, அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 170% அளவுக்கு உயர்ந்துவிட்டது. இவ்வளவு கடன் சுமையுடன் லெபனான் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கடன் சுமை கொண்ட நாடாக இன்றைய தேதியில் உள்ளது.^1

2019 இல் மக்கள் போராட்டம் 

லண்டன் பொருளாதாரப் பள்ளியை சேர்ந்த பவாஸ் கெர்கிஸ் கூறுகையில், 'லெபனான் இன்னும் பொருளாதார சீர்குலைவின் விளிம்பில் இல்லை. அதை ஏற்கனவே விழுந்துவிட்டது' என்கிறார். 


கடந்த மே மாதம் மத்தியில் கொரானா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து விதமான உணவுப் பொருட்களின் விலைகளும் கிட்டத்தட்ட இரு மடங்காகி இருந்தன. வாஷிங்டன் போஸ்டில் பணியாற்றும் நபர் ஒருவர் 'பெரும்பாலான லெபனானியர்கள் இறைச்சி, பழம் வாங்குவதை ஏற்கனவே நிறுத்திவிட்டனர். நிலைமை இன்னும் மோசமானால் ரொட்டித் துண்டு கூட வாங்க முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்' என்கிறார். 


லெபனான் உலகின் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் மொத்தமுள்ள 180 ல் 137 ஆவது இடம் வகிக்கிறது. ( 1 - குறைந்த ஊழல், 180 - அதிக ஊழல்).^2 கட்டற்ற ஊழல், நிர்வாகமின்மை, அரசியல் குழப்பம், சுற்றுச்சூழல் பிரச்சினை, காட்டுத்தீ, நாணய மதிப்பிழப்பு என பிரச்சினைகள் அனைத்தும் முற்றுகையிட்டுள்ள லெபனானிற்கு கிடைத்த ஆட்சியாளர்கள் திறமைற்றவர்களாக போனதால் நாடு இந்நிலைக்கு வந்திருக்கிறது. 
இவற்றிற்கிடையில் லெபனான் அரசு பொருளாதாரத்தை சீரமைக்க உலக நிதி நிறுவனத்தில் இருந்து 10 பில்லியன் டாலர் நிதி உதவியாக கேட்டு இருந்தது. இன்று அந்த தொகை போதுமா என தெரியவில்லை.


இன்று லெபனான் முன்னதாக மிகப்பெரிய கேள்விக்குறி இடப்பட்டு இருக்கிறது. 
புரட்சி நிகழுமா? மக்கள் கொதித்து எழுவார்களா? அரசு கவிழுமா? நாடு திவால் ஆகி விடுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க சற்று பொறுத்திருங்கள். நம்புவோம், லெபனான் தன் போக்கின் திசையைக் கண்டறியும் என்று.


Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை