எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்!

எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்!

-சு.முத்துக்குமார் 10.08.2020

    தலைப்பே ஒரு பொருள் அற்றதாக இருக்கிறது அல்லவா? என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக எழுதி இருக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? அப்படித்தான் இதை பற்றி நான் படித்த பொழுது முதலில் நினைத்தேன். பின்னர் முடிச்சு போடுவதற்கு வாய்ப்பு உள்ளது தெரிந்து கொண்டேன். அதை உங்களுடன் தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.


    இந்தியாவில் பருவமழை இரு பருவ காற்றினால் நிகழ்கிறது. முதலாவது இந்தியாவின் ஆகப் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைக் கொணர்ந்து கொட்டும் தென்மேற்குப் பருவமழை, இரண்டாவது இந்திய தீபகற்பத்தின் தென் கோடி முனையில் அமைந்திருக்கும் தமிழகம் ஆந்திரம் மற்றும் கேரளாவிற்கும் மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவ மழையே இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கின்ற காரணத்தால் அது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவது இல்லை. சரி அதை விடுவோம், தென்மேற்கு பருவமழைக்கு வருவோம். 


தென்மேற்கு பருவமழை :

    இது இந்தியாவின் கோடைகால பருவமழை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் வட அரைக்கோளம் முழுவதும் கோடை தகிக்கும் மே மாத பிற்பகுதியில் தொடங்கி செப்டம்பர் வரை நிகழ்வதால் இதற்கு கோடைகால பருவமழை என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஏன் பருவ மழை வருகிறது என்பதை நாம் எல்லோரும் சமூக அறிவியல் பாடத்தில் பள்ளியில் படித்திருப்போம். இல்லாவிட்டாலும் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். மார்ச் தொடங்கி வட அரைக்கோளம் மிக அதிகமான அளவு வெப்பம் அடைவதால்அதிலும் குறிப்பாக இந்திய தீபகற்பத்தின் வட பகுதி முழுவதும் மே மாதத்தில் கொதிக்கும். இவ்வளவு அதிகமான வெப்பம் அந்தப் பகுதியில் காட்டுத் தீயை குறைத்து ஒரு குறைந்த காற்று அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. நேர்மாறாக அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதி உயர் அழுத்தம் நிலவும். காற்று எப்பொழுதும் உயரழுத்த பகுதியிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி வீசும் என்கிற கருத்துப்படி காற்று ஆஸ்திரேலிய, தென் இந்தியப்பெருங்கடல் பகுதியிலிருந்து இந்திய துணைக்கண்டத்தை நோக்கி பயணிக்கிறது. மே மாத பிற்பகுதியில் அந்தமானில் வீசத் தொடங்கும் இந்த காற்று படிப்படியாக முன்னேறி பின் இரு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு கேரளா மேற்குக்கரை குஜராத் வரையும், மற்றொரு பிரிவு இலங்கை பின் வடகிழக்கு மாநிலங்கள், வங்காளம், மத்திய இந்தியா வழியாக இறுதியில் இரு பிரிவுகளும் ராஜஸ்தானில் ஒன்றிணையும். இது ஒன்றும் புதிதான செய்தி அல்ல. இதிலே எங்கே இருந்து எத்தியோப்பிய மலைக்கு நான் இணைப்பு கொடுத்து இருக்கிறேன் என்று கேட்கலாம்.


    முன்னர் சொன்னது போல ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து வரும் பருவக் காற்று (ஜெட் காற்றோட்டம்) தென்மேற்கு திசையிலேயே வருவது இல்லை. அது தென் கிழக்கிலிருந்தே வரும். அந்தக் காற்று தன் திசையை மாற்றாமல் இருந்தால் அது நேரே சோமாலியா எத்தியோப்பியா மற்றும் அரேபிய தீபகற்பத்தைச் சென்று சேர வேண்டும். ஆனால் எப்படி இந்தியாவை வந்தடைகிறது? குழப்புகிறதா? கீழே காணும் படத்தைப் பாருங்கள்.


தென் மேற்கு பருவக்காற்றின் திசை மாற்றம் 

    தென்கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று நிலநடுக்கோட்டைத் தாண்டும் போது தன் திசையை 90 டிகிரி மாற்றி தென் மேற்கில் இருந்து வீச ஆரம்பித்து விடுகிறது. இந்த 90 டிகிரி திசை மாற்றம் அடைவதன் காரணம்? நிலநடுக்கோடு தான். நிலநடுக்கோட்டுக்கு வடபுறமும் தெனன்புறமும் காற்று சுழற்சி எதிர் எதிர் திசையில் இருக்கும். அதாவது ஒரு புயல் வட அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையில் சுற்றினால் அதுவே தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் சுற்றும். இப்படி நிலநடுக்கோட்டுப் பகுதியில் தன் திசையை மாற்றும் தென்மேற்கு பருவக்காற்று எப்படி வலுப்பெறுகிறது? சோமாலி ஜெட். பன்னெடுங்காலமாக இந்த குறை உயர காற்றோட்டம் தான் தென்மேற்கு பருவமழைக்கு உந்து விசையாக அமைகிறது என நம்பப்படுகிறது. 


சரி, அது என்ன சோமாலி ஜெட்?


    ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் கொம்பு போன்றுள்ள நிலப்பகுதியில், எத்தியோப்பிய நாட்டில் நான்காயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேலே எழுந்து நிற்கின்றன அபிசினிய உயர் நிலம்/ எத்தியோப்பிய மலைகள் (Ethiopian Highlands). இந்த மலைகளுக்கு இருபுறமும் வெறும் பாலை நிலம் தான். இங்கே நிலவும் வெப்பத்தின் காரணமாக விரிவடையும் காற்று ஒரு தாழ்நிலை ஜெட் காற்றோட்டத்தை உண்டாக்குகிறது. இதற்கு சோமாலி ஜெட் என்று பெயர். நிலநடுக்கோட்டைத் தென்மேற்கு பருவக்காற்று கடக்கும்பொழுது இந்த சோமாலி ஜெட் அதற்கு ஒரு உந்து விசையை அளிக்கிறது. இதனால் உந்தப்படும் தென்மேற்கு பருவக்காற்றுக்கு மேலைக் காற்றும் தன்னாலான முடுக்கத்தை உபரியாக தந்துவிடுகிறது. 


சோமாலி ஜெட் 

    ஒரு எளிமையான நடைமுறை சான்றைப் பார்ப்போம். நமது மேற்குத் தொடர்ச்சி மலையை எடுத்துக் கொள்வோம். இதனுடைய உயரம் சராசரியாக 1500 மீட்டர் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு குறைவான உயரம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையே தென்மேற்கு பருவக்காற்று தடுத்து மலையின் பின்புறம் உள்ள பகுதிகளுக்கு மழையை தருவது இல்லை. மழை மறைவு பிரதேசமாக ஆக்கிவிடுகின்றது. அப்படியானால் எத்தியோப்பிய மலைகளின் உயரத்தை பாருங்கள். 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் வரை எழுந்து நிற்கின்றன. இவ்வளவு உயரம் கொண்ட மலைகள் தாழ்நிலை ஜெட் காற்றோட்டத்தை மறித்து தடுத்து திசை மாற்றும் வல்லமை கொண்டவை. காற்றின் திசை மாற்றத்துக்கு என்ன தான் இயற்கையான புவி சுழற்சி ஒரு காரணியாக இருந்தாலும் இந்த இயற்கை தடுப்பு அரண் அதற்கு வலுவூட்டுகிறது. இதன் காரணமாக கடல்களில் இருந்து நீரை முகர்ந்து பருவமழையாக நமக்கு கொட்டுகிறது. இப்போது புரிகிறதா ஏன் பருவக்காற்று 90டிகிரி வளைகிறது என! 


எத்தியோப்பியா உயர்நிலம் பருவக்காற்றில் உண்டாக்கும் தாக்கம் 

 சரி, நாம் இப்போது விவாதத்திற்கு வருவோம். இந்த மலைகளை நீக்கிவிட்டால், சோமாலி ஜெட்டை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? 
    தென்மேற்கு பருவக்காற்று உண்மையான தன் திசையில் வீசாமல் திசைமாறி விடும் என்று நம்பப்படுகிறது. தென்மேற்கு திசையில் இருந்து வீச வேண்டிய காற்று சோமாலி ஜெட் இல்லாத காரணத்தினால் மேல்திசை காற்றுடன் இணைந்து இந்திய துணைக் கண்டத்தில் குறுக்கு வெட்டாக வீச ஆரம்பித்து விடும். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மழையை தரவேண்டிய பருவகாற்று மேற்குக் கரைக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் மியான்மருக்கும் மட்டுமே மழையை தருவதாக மாறிவிடும். இந்திய துணைக்கண்டத்தில் சரி பாதி வறட்சியின் பிடியில் தள்ளப்படும். இங்கே பேசப்படும் அனைத்தும் கணினி வழியான உருவகப்படுத்துதல் மாதிரிகள் தரும் செய்திகளே. 


ஆனால் அண்மித்த மாதிரிகள் தரும் தரவுகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. எத்தியோப்பிய மலைகளை அகற்றினாலும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் மாறாது என அவை சொல்கின்றன. தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடைந்து கூடுதல் மழை பொழிவை தரும் என்று தெரிவிக்கின்றன. கீழ்காணும் படத்தைத் தொட்டு பெரியதாக்கி, புதிய மாதிரிகள் தரும் செய்திகளைப் பாருங்கள். 

a) இயல்பு நிலை b) எத்தியோப்பியா மலைகள் இல்லாமல் 


    எது எப்படி இருப்பினும் எத்தியோப்பிய மலைகளுக்கும் இந்திய பருவக்காற்றுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. நமக்கு கிடைக்கும் தரவுகள் யாவும் கணினிவழி உருவகப்படுத்துதல் மூலமே கிடைத்தது ஆகும். உண்மையில் மலைகளை அகற்றிவிட்டு நம்மால் சோதனை நடத்த இயலாது. இந்த தொடர்புகள் மேலும் ஆராயப்பட்டு இந்திய பருவக் காற்றை பாதிக்கும் காரணிகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும். எந்த காரணிகளை எல்லாம்  நம்மால் கட்டுப்படுத்த முடியுமோ, அவற்றை கட்டுப்படுத்தி பருவக்காற்றை தன் திசை மாறாமல் வைத்திருக்க வேண்டும்.


மேலும் வாசிக்க:

Comments

  1. Thank u for sharing valuable messages in easy to understand concept..More to Go Mr.Muthukumar specially that types of cloud which u shared earlier in whatsapp loved it.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை