மூழ்கும் அசாம்: இன்றா நாளையா?

மூழ்கும் அசாம்: இன்றா நாளையா?
- சு. முத்துக்குமார் 01.08.2020


கடந்த ஒரு வாரமாக செய்திகளில் அடிபடுவது அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு பற்றியது. கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு 100 பேரை காவு வாங்கியிருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல எண்ணற்ற விலங்குகளையும் வன உயிரினங்களையும் உடன் அடித்துச் சென்று இருக்கிறது. காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தின் 90% பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாலைகளில் படுத்து கிடக்கும் காண்டாமிருகத்தை வீடுகளில் தஞ்சம் புகுந்த விலங்குகளையும் நாளிதழ்கள் செய்தியாக வெளியிடுவதைக் காணலாம். வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதிப்புகளோடு கொரோனாவின் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் இருதலைக்கொள்ளி எறும்பாக அசாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறது. 


அசாமில் வெள்ளம் இப்போதுதான் ஏற்படுகிறதா? இல்லை இது புதிதாக நிகழும் பேரிடரா? ஏன் அசாமிற்கு மட்டும் இவ்வளவு பாதிப்புகள்? தவறு யார் பக்கம் இருக்கிறது? இயற்கையா மனிதனா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை சற்றுப் பொறுமையாக காண்போம்.


அசாம் ஒரு அறிமுகம்:

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏழு சகோதரி மாநிலங்களுள் ஒன்று அசாம். வடக்குப் பகுதியில் இமயமலை, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் காசி, கோரா மற்றும் கர்பி அங்லாங் மலைத்தொடர்கள் சூழ நடுவில் பெரும்பகுதி பள்ளத்தாக்காக அமைந்திருக்கிறது அசாம். அந்தப் பள்ளத்தாக்கை பிரம்மபுத்திரா நதி ஊடறுத்துப் பாய்கிறது. ஆக அசாமின் வாழ்வு என்பது பிரம்மபுத்திரா நதியைச் சார்ந்தது தான்.


அசாமின் புவியியல் அமைவு 




பிரம்மபுத்திரா நதி: 

சீனாவின் திபெத் பீடபூமியில் மானசரோவர் ஏரிக்கு சற்று கிழக்காக கடல் மட்டத்திலிருந்து 4887 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி அங்கே இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து அருணாச்சல பிரதேசத்தில் தென் முகமாக திரும்பி பின் 180 டிகிரி வளைந்து மேற்கு நோக்கி தன் பயணத்தை தொடர்ந்து இறுதியில் கங்கை நதியில் சென்று விழுகிறது. பிரம்மபுத்ரா நதியின் மூன்றில் ஒரு பாகம் இந்தியா நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. நீர் வெளியேற்றத்தை பொறுத்து வகைப்படுத்தினால் உலகில் மூன்றாவது மிகப் பெரிய நதியாக பிரம்மபுத்திரா நதி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய நதிகளுள் பிரம்மபுத்திரா நதியே மிக அதிகமான அளவு வண்டல் மண்ணை சுமந்து வருகிறது. அந்த அளவு வண்டலை இமயமலையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அடித்து வருகிறது. இவ்வளவு அதிகமான வண்டல் ஆற்றில் அடித்து வரப்படுவதால் நதி படுகையில் சேர்க்கபிக்கப்படும் வண்டலின் அளவும் அதிகம். பிரம்மபுத்திரா நதி பாயும் நிலப்பரப்பின் இடவியலைப் பார்த்தோமானால் மிக உயர்ந்த பீடபூமியில் தொடர்ந்து பயணிக்கும் நதி அருணாச்சல பிரதேசத்தில் சடாரென கீழே இறங்கி அசாமில் தாழ் நிலத்தை அடைந்து விடுகிறது. 
பிரம்மபுத்திரா நதி பாயும் இடத்தின் இடவியல் அமைப்பை கீழ்க்காணும் கோட்டுப்படம் மூலமாக காணலாம்.




நிலவியல் ரீதியில் பார்த்தால் பிரம்மபுத்ரா நதி தான் உலகின் இளம் நதி. இது வானிலிருந்து பார்க்கும்பொழுது மிகத்தெளிவான பட்டையாக காணப்படும். பல சிற்றாறுகள் இணைந்துதான் பிரம்மபுத்திரா நதி உருவாகி இருக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இச்சிற்றாறுகள் இணைந்து பேறாராக உருமாறி ஒன்றாகப் பாயும். 
திபெத்தில் 22 துணை ஆறுகளையும், இந்தியாவில் 39 துணை ஆறுகளையும், வங்காளதேசத்தில் மூன்று துணை ஆறுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு இறுதியில் உலகின் மிகப் பரந்த பிரம்மபுத்திரா-கங்கைச் சமவெளியை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மபுத்திரா நதியில் பாயும் நீரின் அளவு கிட்டத்தட்ட 527.28 பில்லியன் கன மீட்டர் ஆகும். இது இந்தியாவில் பாயும் ஒட்டு மொத்த மேற்பரப்பு நீரில் 29 விழுக்காடு. பிரம்மபுத்திரா நதி பாயும் பள்ளத்தாக்கு 80 கிலோ மீட்டர் அகலத்தை மட்டுமே கொண்டு விளங்குகிறது. அதில் ஆறு முதல் பத்து கிலோமீட்டர் வரையில் பிரம்மபுத்திரா நதியே அடைத்துக் கொள்கிறது. பிரம்மபுத்திரா நதி பாயும் அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் நிலநடுக்கம் ஏற்படும் அதிக வாய்ப்புள்ள மண்டலங்களில் அமைந்திருக்கிறது. ஆக நிலநடுக்கங்களும் பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

பிரம்மபுத்திரா நதி படுகை அமைப்பு:



கிட்டத்தட்ட வருடத்தில் ஐந்து மாதங்கள் மழைப்பொழிவு நீடிக்கும் இந்த மாநிலத்தில், ஆண்டுக்கு சராசரியாக 248 முதல் 365 செண்டி மீட்டர் வரை மழை பொழிவு கிடைக்கிறது. மாநிலத்தின் சில இடங்களில் ஒரே நாளில் 500 மில்லி மீட்டர் மழை பொழிவு கூட பதிவாகி இருக்கிறது. இங்கே மழை மிகச் சாதாரணம். உலகிலேயே மிக அதிக மழைப் பொழிவு பெறும் இடமான மௌசின்ராமும், சிரபுஞ்சியும் பிரம்மபுத்திரா படுகையில் இருக்கும் மேகாலயா மாநிலத்தின் மலை முகடுகளில் தான் இருக்கிறது என்பதையும் இங்கே நாம் தொடர்பு படுத்திக் கொள்ளலாம். மழை மட்டுமே அல்லாமல் பிரம்மபுத்திரா நதி பனி ஆறுகளில் இருந்தும் நீரைப் பெறுகிறது. ஆகவே இரு மூலங்களின் வாயிலாக பிரம்மபுத்திரா நதிக்கு நீர் கிடைக்கிறது. 


வெள்ளம்:

இவ்வளவு பெரிய நதியைப் பெற்றிருக்கும் அசாமில் வெள்ளம் என்பது இயல்பான ஒன்றுதானே!?ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்லும்போதுதான் அதனுடைய முக்கியத்துவம் இங்கே பேசப்படுகிறது. அசாமில் ஆதிகாலம் தொட்டு வெள்ளம் ஏற்பட்டு கொண்டுதான் வந்திருக்கிறது. அது புதிதான ஒன்றல்ல. மக்கள் வெள்ளத்தை வரவேற்றிருக்கிறார்கள். அசாமில் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 78 ஆயிரத்து 523 சதுர கிலோமீட்டர்கள். அதிலே கிட்டதட்ட 31 ஆயிரத்து 50 சதுர கிலோ மீட்டர்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள பகுதியாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 39.58 %. இது நாட்டின் ஒட்டுமொத்த வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலப்பரப்பில் 9.40%. 
இந்திய நிலப்பரப்பில் மொத்தம் 3,35,300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது (10.2%). ஆனால் அசாமிலோ இது கிட்டத்தட்ட 40 விழுக்காடு. இது இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம். இப்போது நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ளலாம் வெள்ளம் என்பது அசாமில் எவ்வளவு தீவிரமான ஒன்று என்று. இந்திய விடுதலைக்கு முன்பாக 1897, 1910, 1911, 1915, 1916, 1931 ஆகிய ஆண்டுகளில் அசாம் வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்பு 1954, 62, 72, 74, 77, 78, 84, 86, 87, 88, 89, 90 மற்றும் 90 க்கு பிறகு ஏறத்தாழ அனைத்து ஆண்டுகளிலும் வெள்ளம் அசாமை மூழ்கடித்து இருக்கிறது. அது சரி, இந்திய விடுதலைக்கும் வெள்ளப் பெருக்கெடுப்புக்கும் என்ன தொடர்பு? 


அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் 1950ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் அசாமின் புவியியல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 1897 மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பிரம்மபுத்திரா நதியின் படுகையை ஏழு அடி உயர்த்தி விட்டது. கவுகாத்தியில் 167.41 அடியிலிருந்த பிரம்மபுத்திரா நதியின் படுகை 1950இல் 175 அடிக்கு உயர்ந்து விட்டது. அது மட்டுமே காரணம் அல்ல  என்றாலும் அத்துடன் பல காரணங்களும் இருக்கின்றன. 
ஆண்டுதோறும் தீபாவளி பொங்கல் போல வரும் வெள்ளம், ஏற்படுத்தி சென்றிருக்கும் பாதிப்புகள் எவ்வளவு? மனித உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரம் எவ்வளவு? 1998இல் 200 கோடி அளவுக்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இது 2004 இல் 771 கோடியாக அதிகரித்து விட்டது. ஆண்டு வாரியாக ஏற்பட்டிருக்கும் சேத விவரங்களை கீழ்க்காணும் அட்டவணை மூலமாக காண்போம்.



அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களின் மூலமாக ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகமான அளவில் இருக்கிறது. 

2012 வெள்ளம் கிட்டத்தட்ட 60 லட்சம் மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கி, 124 பேர்களை பலி கொண்டு, 16 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட 540 வனவிலங்குகளையும் அடித்துச் சென்றுவிட்டது.


2013 ல் ஏற்பட்ட வெள்ளம் அசாமின் 27 மாவட்டங்களில் 12 மாவட்டங்களையும், 396 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் மக்களையும் பாதிப்பிற்கு உள்ளாகி விட்டது.


2015 ல் ஏற்பட்ட வெள்ளம் மிக அதிகமான அளவில் 21 காண்டாமிருகம் உட்பட 300 வனவிலங்குகளையும், 28 பேரை பலியும் வாங்கி 18 லட்சம் மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி சென்று இருக்கிறது.


2017ல் ஏற்பட்ட வெள்ளம் மோசமான அளவில் 85 பேரை காவு கொண்டு, ஐந்து லட்சம் மக்களை வீடற்றவர்கள் ஆக ஆக்கி சென்றுவிட்டது.


2018 வெள்ளம் அசாமின் 6 மாவட்டங்களில் நான்கரை லட்சம் பேரை பாதிப்பிற்கு உள்ளாகி 12 பேரை உடன் அடித்துச் சென்று விட்டது.


2019 இல் ஏற்பட்ட வெள்ளம் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளம் ஆகும். உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைவு என்ற போதிலும் 50 லட்சம் பேர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. 12 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட 141 வனவிலங்குகள் வெள்ளத்தில் இறந்துவிட்டன.


நிகழாண்டு ஏற்பட்டிருக்கிற வெள்ளம் இப்போதுவரையிலும் அசாமின் 33 மாவட்டங்களில் 27யை மூழ்கடித்து, 2543 கிராமங்களை சூழ்ந்து, 30 லட்சம் பேரை பாதிப்பிற்கு உள்ளாக்கி 108 பேரை காவு வாங்கியிருக்கிறது. காசிரங்கா வனவிலங்கு பூங்காவின் 90 வீதமான நிலப்பகுதிகள் நீருக்கடியில் இருக்கின்றன. வனவிலங்கு பூங்காவை விட்டு வெளியேறிய விலங்குகள் மேடான பகுதியில் இருக்கும் வீடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கின்றன. சில விலங்குகள் சாலையில் படுத்துக் கிடப்பதை கூட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பார்த்திருக்கலாம். மக்கள் மட்டுமல்ல வனவிலங்குகளும் இந்த தொடர் வெள்ளப் பெருக்குகளை சமாளிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன.

  வெள்ளம் சூழ்ந்த அசாம்
வெள்ளத்தின் பிடியில் காண்டாமிருகங்கள்
பூங்காவில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்த காண்டாமிருகம் ஒன்று
வெள்ளப்பெருக்கு தவிர்த்த அதைச் சார்ந்த பாதிப்புகள்:

வெள்ளப்பெருக்கு தவிர்த்து அசாம் எதிர்கொள்ளும் மற்றொரு மிக முக்கியமான பிரச்சனை கரையரிப்பு (River bank erosion). 1950 ஆம் ஆண்டுக்குப் பின் கிட்டத்தட்ட 4270 சதுர கிலோ மீட்டர் நிலத்தை பிரம்மபுத்திரா நதி எடுத்துக்கொண்டு விட்டது. அதாவது கரைகளை அழித்து தன் நீர்படுகையாக மாற்றிக் கொண்டுவிட்டது. அசாமின் 7.4 சதவீத நிலம் இப்படியாக பிரம்மபுத்திரா நதியின் படுகையாக/வெள்ளச்சமவெளியாக மாறிவிட்டது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் எக்டேர் நிலத்தை  அசாம் பிரம்மபுத்திரா நதியிடம் இழந்து கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் பிரம்மபுத்ரா நதியின் அகலம் இதன்காரணமாக 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துவிட்டது. கரை அழிக்கப்பட்டு புதிய வெள்ளச் சமவெளிகள் உருவாகின்ற காரணத்தினால் அசாமின் ஊரகப்பகுதி பொருளாதாரம் மிகக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. பயிரிட நிலங்கள் கிடைப்பது அரிதாகி வருவதால் கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. 


ஆண்டுவாரியாக பிரம்மபுத்திரா நதி அடைத்துக்கொள்ளும் நிலத்தின் பரப்பளவை அட்டவணையில் காண்க. 

கரை அரிப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் :


புவியியல், இடவியல் ரீதியான காரணங்கள் என்னவென மேற்கண்ட பகுதியில் நாம் பார்த்திருந்தாலும் மனிதர்களால் ஏற்படும் காரணிகளும் வெள்ளத்திற்கான முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. 


  • மக்கள் பெருக்கம்: 
இந்திய விடுதலைக்கு முன்பு பிரம்மபுத்திரா சமவெளியின் மக்கள் நெருக்கம் 9-29 பேர்/சதுர கிமீ என்றிருந்த நிலையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது 398 பேர்/சதுர கிமீ. மக்கள் தொகை கிட்டத்தட்ட 13 மடங்கு பெருகி இருக்கிறது. இரு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு மாநிலமான அசாமில் வசிப்பதற்கான இடம் எங்கே? பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு தான். அதிலும் ஆற்றை ஒட்டியே மக்கள் வசிக்க விரும்புவார்கள் என்பதால் ஆக்கிரமிப்புகள் அதிகமான அளவில் பெருகிவிட்டன. ஆற்றின் வெள்ளச் சமவெளியில் கட்டுமானங்கள் பல கட்டப்பட்டு, வெள்ள பாதிப்பு எண்ணிக்கையை ஆண்டுக்காண்டு அதிகப்படுத்தி கொண்டிருக்கின்றன. 


  • ஆற்றின் கரை அழித்தல்: 
பிரம்மபுத்திரா ஆற்றின் இரு புறங்களில் இருக்கும் கரைகளை மக்கள் குடியேறுவதற்காகவும், விவசாயம் செய்யவும் சேதப்படுத்தி அழிப்பதால் ஆறு கரைகளைத் தாண்டி உள்ள நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது புகுந்து விடுகிறது. 50 ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படாத கரைகளாலும் வெள்ளம் ஏறிக் கொண்டே வருகிறது.


  • முறை தவறிய கட்டுமானங்கள்: 
ஆற்றின் வெள்ளச் சமவெளியில் கட்டப்படும் முறைதவறிய கட்டுமானங்களும், பயிரிடுதல்களும் வெள்ள பாதிப்பை இன்னும் அதிகம் ஆக்கிவிடுகின்றன. கோடை காலத்தில் ஆறு வற்றும் போது அங்கே சென்று குடிசை போட்டுவிடுகிறார்கள். பின்பு வெள்ள நேரங்களில் முழுவதும் வெள்ளத்திற்கு இட்ட வாய்க்கரிசி போல அமைந்து விடுகிறது.


தடுப்பு முறைகள்:

சரி, ஆண்டுக்காண்டு வெள்ளம் கூடுகிறதே?! அரசு ஏதேனும் செய்ய முன்வந்திருக்கிறதா? நிரந்தர திட்டம் எதும் வகுத்து இருக்கிறதா?


பதில், தெளிவாக இல்லை!


  • கட்டுமான தடுப்புகள்:
என்ன‌தான் நிரந்தர தீர்வாக கரை எழுப்புதல் இல்லையென்றாலும், சில குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாக்க கரைகள் பயன்படவே செய்திருக்கின்றன. 1950 முதல் 30ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது, கரை அமைக்க மட்டும். ஆனால், பிரச்சினை என்னவென்றால் ஒரு பகுதியில் கரை எழுப்பப்படும் போது அது மற்றொரு பகுதியை மிக மோசமாக மூழ்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. 1986 ல் அசாம் வெள்ளப் பாதிப்புகளை ஆராய பணிக்கப்பட்ட கமிட்டி தீர்க்கமாக ஒன்றைச் சொல்லியது "கரை எழுப்புதல் அசாம் ஆறுகளின் போக்கை கவலைக்கிடமாக்கி விட்டது. இருக்கின்ற நிலைமையை மேலும் மோசமாக்காமல் இருக்க இனிமேல் கரைகள் எழுப்பப்படவே கூடாது" என.
மாற்று வழிகளாக அணைகள் கட்டுதல் மற்றும் ஆழப்படுத்துதல் போன்றவையும் முன்மொழியப்படுகின்றன. 

அணைகள் கட்டுதல் சுற்றுச்சூழல், இடம், வனம் என பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு பயன்தரும் என்பதும் கேள்விக்குறியே! அவை சிறிது காலத்திலேயே வண்டல் படிந்து மேடேறி விட்டால்? 


ஆழப்படுத்துதல், சோதனை முறையில் 60-70 காலகட்டத்தில் செய்து பார்க்கப்பட்டாலும் மிக நல்ல பலனைக் கொடுக்கிறதா என்றால் இல்லை. மேலும் மிகுந்த செலவு பிடிக்கும் வேலை ஆகும். 


  • கட்டுமானங்கள் அல்லாத வழிமுறைகள்: 

காடு வளர்த்தல் - வெள்ளச் சமவெளிகளை மனிதப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றில் காடு வளர்ப்பு செய்வது மிக நல்ல பலனைக் கொடுக்கும் என்பது தெரிந்து இருந்தாலும் அதைச் செய்வது எளிதான காரியமாக இல்லை. ஏனெனில் வெள்ளச் சமவெளிகளில் வசிக்கும் மக்களை இடமாற்றம் செய்வது அரசின் லாப நட்ட கணக்கீடுகள் மூலமாகப் பார்த்தால் மதிப்பெண் சுழியமே! 

வெள்ளப் படுகை மேலாண்மை: இதை நல்ல திட்டமிடல் இருந்தால் செய்து முடிக்கலாம். வெள்ளம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றில் வசிக்கும் மக்களை முறையான ரீதியில் வசிக்கச் செய்து, மேலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாமல் தடுக்க அரசினால் முடியும். 


இவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மக்களும் மனது வைக்க வேண்டும்! ஆட்சியாளர்களும் மனது வைக்க வேண்டும். எப்படி ஒரு ஆட்சியாளர் தன் மக்கள் ஆண்டாண்டு காலமாக வெள்ளத்தில் தத்தளிப்பதை கண்டும் காணாமல் இருக்கிறார்! நிரந்தரத் தீர்வுக்கு முயற்சி மேற்கொள்ளாமல் இருக்கிறார் என்பதும் மக்களும் அவர்களையே மீண்டும் மீண்டும் எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள்! ஆக்கிரமிப்புகளைச் சளைக்காமல் மேற்கொள்கிறார்கள் என்பதும் விடை காண முடியாக் கேள்விகள். என்று அசாம் மூழ்குமோ?

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை