சீனத் தொலைத்தொடர்பு புரட்சி

- இரா. கவுசிக், 18.06.'20

சீனா மட்டமான தரம் குறைந்த பொருட்களைத் தயாரிக்கிறது என நாம் எல்லாம் கேலி பேசிக் கொண்டிருந்தோம். நாம் மட்டுமல்ல, மேற்குலகும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தது. ஆனால் 2018லிருந்து இப்போது வரை சீனா என்னவெல்லாம் செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது மேலும் என்பதைக் காண்போம். 

சீனப் பொருட்கள் தரம் குறைந்தவை என்ற நிலையிலிருந்து மாறி இன்று பல பிரபல நிறுவனங்களுக்கான பேர்பாதி மூலப்பொருட்கள்களைச் சீனாவே தருகிறது. ஏன் ஆப்பிள் நிறுவனமே சீன உதிரி பாகங்களை நம்பி இருக்கிறது. அங்கே உள்ள உற்பத்தியை குறைத்தாலும், வேறு நாடுகளில் அசெம்பிள் செய்ய சீன உதிரி பாகங்களே தேவையாய் இருக்கிறது. 

கிட்டத்தட்ட கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக மிகத்தீவிரமாக சீனா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

1. ஹுவய் நிறுவனத்தின் கேமரா மற்றும் வன்பொருள்கள்
ஒரு காலத்தில் கேமரா என்றால் சோனி நிறுவனம் தான் என்று இருந்ததற்கு இன்று சவால் விடுக்கிறது ஹூவய் நிறுவனத்தின் திறன்பேசி கேமரா மற்றும் அதன் திறன். 
கூகுளே இல்லாவிட்டாலும் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. கூடிய விரைவில் இரண்டாம் அல்ல முதல் இடம் பிடிக்கலாம். 
2. ஒப்போ (ஒன்பிளசு, விவோ, ரியல்மி) நிறுவனம் திரையின் கீழ் இருக்கும் கேமராவை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 360° மடக்கும் வகையிலான திறன்பேசிகளை அறிமுகப் படுத்த இருக்கிறது.  இதில் முக்கியம் என்னவென்றால் முழுவதும் தன் நிறுவன உழைப்பில் அதை கொண்டு வருகிறது.

3. ஹூவய் நிறுவனம் இன்று உலகிலேயே சிறந்த 5ஜி நெட்வொர்க்கை கொண்டு இருக்கிறது. பல ஐரோப்பிய நிறுவனங்கள் ஹூவய் நிறுவனத்தின் அலைபேசி கோபுரங்களையே பமன்படுத்துகின்றன. அமெரிக்கா இப்போது 5ஜி யை அறிமுகப் படுத்தும் நிலையில் சீனா 6ஜி நெட்வொர்க்கை சோதனை செய்ய ஆயத்தமாக இருக்கிறது. 

4. விவோ நிறுவனம் 110வாட்ஸ் உயர்திறன் மின்னேற்றி (சார்ஜ் பூஸ்டர்) உருவாக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறது. அது வெளியாகும் பட்சத்தில் 10 நிமிடங்களில் உங்களுடைய அலைபேசியை முழுமையாக மின்னேற்றம் செய்து விட முடியும். ஏற்கெனவே ஒன்பிளஸ், ரியல் மி நிறுவனங்கள் 65வாட்ஸ் உயர் திறன் மின்னேற்றிகளை அறிமுகம் செய்து விட்டன. அவை உங்களது திறன்பேசிகளை அரை மணி நேரத்திற்குள்ளாக மின்னேற்றம் செய்து விடும்.

5. சந்தையில் ₹.50. ஆயிரத்துக்கு உள்ளாக நல்ல திறன் வாய்ந்த, புதிய அமைப்புகள் அடங்கிய திறன் பேசிகள் வேண்டுமானால் நம்முடைய தெரிவு சீன நிறுவனங்களின் திறன்பேசிகளாகத் தான் இருக்கும். சாம்சங் விதிவிலக்கு.

ஆப்பிள் நிறுவனத்தால் முதல் இடத்திற்கு வருவது என்பது இயலாத காரியம். தற்போதைய சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் தானாக புதிய புதிய மென்பொருட்களை வடிவமைப்பது இல்லை. பிறரிடமிருந்து விலைக்கு வாங்கி தனக்கு ஏற்றவாறு மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒப்போவோ ஹூவய் நிறுவனமோ அப்படி இல்லை. தாங்களாகவே புதிய புதிய மென்பொருட்கள் அமைப்புகளை வடிவமைக்கிறார்கள். சாம்சங் கூட இதிலே பின்தங்கி தான் இருக்கிறது என்றாலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் சீன நிறுவனங்களை வெறும் தரம் குறைவு விலை குறைவு என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களைப்போல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை எந்த பெரிய பிறநாட்டு நிறுவனமும் செய்யவில்லை.  

இந்தப் பட்டியலில் நமக்கான இடம் எங்கே இருக்கிறது? நீங்களே சொல்லுங்கள். நம் நிறுவனங்கள் எந்த இடத்தை பிடித்திருக்கின்றன என? நம்மிடம் வாய்ப்புமில்லை உற்பத்தி செய்யும் கட்டமைப்பும் இல்லை எனும் நிலையில் சீன நிறுவன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்பது வடிவேலு சொன்னது போல் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்கிற கதைதான்.

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை