தேங்காய் பறிக்கும் குரங்குகள்

குரங்குகள் தென்னை மரமேறி தேங்காய் பறித்துப் போடுகிறது! குரங்குகளுக்கான பள்ளி ஒன்று இயங்குகிறது!  
நம்ப முடியவில்லையா? 
ஒரு உயிரினம் திறமையாக இருக்குமெனில் அதை பல்வகைப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? மாடு வண்டி இழுக்கிறது, நிலம் உழுகிறது! குரங்கு தேங்காய் பறித்தால்?! கேட்க ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நானும் முதலில் அப்படித்தான் இதைக் கேள்விப்பட்டேன். 
திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி நூலை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அதிலே பன்றி வால் குரங்குகளைப் பற்றியும் அவற்றை மலாயாவில் தென்னை மரமேறி தேங்காய் பறிக்க பயன்படுத்துவதைப் பற்றியும் எழுதியிருந்தார். வினோதமாக இருந்தது. இதைப்பற்றி மேலும் தேடிய பொழுது வித்தியாசமான செய்திகளும் கிடைத்தன. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குரங்குகளை பல செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் தென்னை மரமேறி தேங்காய் பறிப்பது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி குரங்குகள் தேங்காய் பறித்து போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேங்காய் பறிப்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பன்றி வால் குரங்குகளே! (Pigtailed Macaque - அறிவியல் பெயர்: Macaca nemestrina)
குரங்குகளின் இடுப்பிலே ஒரு கயிற்றைக் கட்டி மேலே ஏற்றி விடுவார்களாம். மர உயரத்திற்கு கயிற்றின் நீளம் இருக்குமாம். மரத்தின் உச்சிக்குச் சென்றதும், இந்தக் குலையை கீழே தள்ளிவிட வேண்டும் என்று கயிற்றை ஆட்டுவார்களாம். குரங்கு காய்களை காய்களை தலை மூட்டைத் திருகி, பறித்து கீழே போடுமாம். 

நாளொன்றுக்கு ஒரு மனிதனால் அதிகபட்சம் பத்து இருபது மரங்களும், மேலதிகம் 100 காய்களும் பறிக்க முடியுமென்றால்; ஆண் குரங்குகளின் மூலமாக 1600 க்கும் மேலான காய்களையும், பெண் குரங்குகளின் மூலமாக 600க்கும் மேலான காய்களையும் பறிக்க முடிகிறது, தாய்லாந்தில். இருநூறு முன்னூறு தென்னை மரங்கள் கொண்ட தென்னந்தோப்பை வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு, அவற்றிலிருந்து காய் பறிக்க ஆட்களை நியமித்து, வேலை வாங்குவது மிக கடினமான செயல் என்பதால் குரங்குகளை இயல்பாக பயன்படுத்துகிறார்கள். 20 அடியிலிருந்து 60 அடி வரை உயரமுள்ள மரங்களில் குரங்குகள் அசாதாரணமாக ஏறி காய் பறிக்கின்றன. இளம் காய் எது முதிர்ந்த காய் எது என்பதையும் வித்தியாசம் காண அவற்றை பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றனர். உயரமான மரங்கள் எனில் கீழே இருந்து மேலே அனுப்பும் போதே குரங்குக்கு கட்டளை இடப்பட்டு விடுகிறது இளம் காயா, முதிர்ந்த காயா என! 
'தாய்லாந்தில், குரங்குகளால் பறிக்கப்படாத இளநீரை சுவைப்பது கடினம். கிட்டத்தட்ட 99 விகிதம் தேங்காய்கள் குரங்குகளால் தான் பறிக்கப்படுகின்றன' என்கிறார் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள "குரங்குகளுக்கான பள்ளி"யைச் சேர்ந்த அர்ஜென். 
மேலும் அவர் 'குரங்குகள் ஊழல் செய்வதில்லை, ஏமாற்றுவதில்லை, ஓடிப் போவதில்லை; அவற்றிற்கு காப்பீடு தேவை இல்லை, சம்பள உயர்வு தேவை இல்லை' என்கிறார். உண்மைதான்.

சோம்போர்ன் சேக்கோ என்பவரால் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் சூரத் தானி என்னும் பகுதியில் 1957ல் தொடங்கப்பட்டிருக்கிறது குரங்குகளுக்கான இந்த பள்ளி.
இவருடைய பெற்றோர் விவசாயிகளாக இருந்திருக்கின்றனர். அவர்கள் குரங்குகளை வைத்து தேங்காய் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்திருக்கின்றனர். குரங்குகள், இதேபோன்ற விவசாயிகளால் துன்புறுத்தப் படுவதையும், கொடுமைப் படுத்தப் படுவதையும் பார்த்த சோம்போர்ன்க்கு அவரது புத்த மத குரு, குரங்குகளை நன்முறையில் பாவித்து, கொடுமை படுத்தாமல் அவற்றைப் பயிற்றுவிக்க குரங்குகளுக்கு பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்க உதவியிருக்கிறார். அதன் பின்னரே இந்த குரங்கு பள்ளி உருவாகியிருக்கிறது. முதன் முதலில் குரங்குகளுக்காக தொடங்கப்பட்ட பள்ளி இதுவே ஆகும். இன்று தெற்கு தாய்லாந்தின் மிகப் பெரிய குரங்கு பள்ளியாக விளங்குகிறது. 1993இல் சூரத் தானியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இவரும், இவருடைய வளர்ப்பு குரங்கும் மாகாண கொடியை ஏந்திச் சென்றிருக்கிறார்கள். 

காட்டு குரங்குகளை பிடிப்பது சட்டவிரோதம் என்பதால் ஏற்கனவே வீடுகளில் வளர்க்கப்படும் குரங்குகள் குட்டி போட்டவுடன் அவற்றை சிறிது காலம் கழித்து இங்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்களாம். குரங்குகளுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில் மனிதர்களுடன் எவ்வாறு பழகுவது என்பது பற்றியும், பின்பு தேங்காய் பறிப்பது எவ்வாறு என்பதாக பயிற்சி விரிவடைகிறது. சிறிய கம்பத்தில் இருக்கும் தேங்காயை பறிக்க முதலில் பயிற்றுவிக்கப்படும் குரங்கு, பிறகு 60, 80 அடி உயரம் இருக்கும் மரங்களுக்கு ஏற்றப்படுகிறது. ஆறுமாதத்தில் ஒரு குரங்கு முழுப் பயிற்சி பெற்று தேங்காய் பறிக்கும் சூரனாக மாறிவிடுகிறது. சோம் போர்ன் 2002 இல் மறைந்து விட்டாலும் இன்றும் இப்பள்ளி அவரது உறவினர்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 

இந்தியாவிலும் கேரளத்தில் குரங்குகளை பயன்படுத்தி தேங்காய் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனினும் அரசின் அனுமதி இன்மையால் நடைமுறை சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ள ஜெய்ப்பூர் மதுரா போன்ற வட இந்திய நகரங்களில் இருந்து குரங்குகளை பிடித்து அவற்றை பழக்கப்படுத்தி பயிற்றுவித்து தேங்காய் பறிக்க பயன்படுத்தினால் என்ன தவறு? மனிதர்கள் தேங்காய் பறிக்க தயாராக இல்லை எனும் நிலையில் அவர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் தொல்லைதரும் விலங்குகளை இப்படி பயன்படுத்தினால் நல்லதுதானே.

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை