சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறித்து மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்
சென்னையை சேர்ந்த நண்பர் மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்:
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது ஏன்?
மற்ற நகரங்களில் மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் குடிசைப் பகுதிகளில் அதிகம். அதனால் எளிதாக கொரோனா பரவிவிட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் அதிக கொரோனா பரிசோதனைகள் செய்துள்ளோம். அதுவும் ஒரு காரணம். மேலும் முக்கியமாக மக்களின் ஒத்துழைப்பு இன்மையும் ஒரு காரணமாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இங்கே விதிகளை மீறுவதும், பின்பற்றாமல் இருப்பதையும் பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
[ சென்னையின் கிட்டத்தட்ட 29 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதியில் வசிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி இணைப்பில்] ¹.
படம்: சென்னையில் மண்டல வாரியாக குடிசைப்பகுதிகள்
படம்2: சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோர்
அரசு எந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது? பொதுவில் மெத்தனமாக செயல்படுவதாக பேசப்படுகிறதே?
அரசு மிகச்சிறப்பான செயல்பட்டதாகவும் சொல்ல இயலாது. அதேசமயம் அவ்வளவு மோசமாகும் செயல்படவில்லை. ஓரளவிற்கு அவர்கள் இந்த விஷயத்தில் செய்திருக்கிறார்கள்.
சென்னையில் இப்பொழுது இறப்பு விகிதம் அதிகமாகிக் கொண்டு வருகிறதே? திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கூட கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறதே?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் கொரோனா வந்த பொழுது அது அவ்வளவு தீவிரமான நோயாக இல்லை. நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் குணம் பெற்று வந்ததால் இது பெரிய பாதிப்பு உண்டாகாது என எண்ணப்பட்டது. தற்பொழுது அந்த வைரஸ் இந்திய மண்ணிற்கு ஏற்ப மரபணு மாறுதலுக்கு உள்ளாகி புது ஜீனோமைப் பெற்றுள்ளது. இதற்க்கு கிளஸ்டர் A3i எனப் பெயரிடப்பட்டுள்ளது. ²
திமுக எம்எல்ஏ போல அறுவைசிகிச்சை செய்துகொண்ட, நீரிழிவு நோய் கொண்ட இருதய நோய்கள் கொண்ட, சிறுநீரக குறைபாடு கொண்ட ஆட்கள் நம்மூரில் அதிகம் உள்ள நிலையில் கொரோனாதோற்றால் அவர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து விடும் அல்லவா ?
நீரிழிவு நோய் என்பதே பொதுவாக ஆட்கொல்லி நோய் தான். அது நேரடியாக மனிதர்களைக் கொல்வது இல்லை என்றாலும் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை பெரிதும் குறைக்க செய்து எளிதாக நோய்த் தொற்றும் வாய்ப்பை உண்டாக்கி விடுகிறது. அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கொரோனா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுவும் சென்னையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்த நிலை நீண்டு கொண்டே சென்றால் என்ன செய்ய முடியும்? நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லையே?
குறிப்பிட்ட காலத்தில் நம்முடைய உடம்பில் கூட்டு எதிர்ப்பாற்றல் ( Herd immunity) உண்டாகும். இதை எப்படி சொல்வது என்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நோயாளியை சுற்றி திடமான மனிதர்கள் நோய் பாதிப்பிற்கு உள்ளாகாதவர்கள் இருக்கிறபோது அவர்களுடைய நோய் எதிர்ப்பாற்றல் நல்ல நிலையில் இருந்தால் அவர்களைத் தாண்டி அந்த நோய் பரவாது கட்டுப்படுத்தப்படும். பிறகு அனைவரிடமும் அந்த எதிர்ப்பாற்றல் உண்டாகிவிடும்³.
ஆனது ஆகிவிட்டது இனி என்ன செய்ய வேண்டும் அரசும் சரி மக்களும் சரி?
ஏற்கனவே நோய் பன்மடங்கு பரவி விட்டதால் இனி தடுக்க இயலாது. இப்போது செய்ய வேண்டியது தற்காப்பே. ஊரடங்கு தளர்த்தப் பட்ட நிலையில், மக்களின் இயக்கம் சீராக அதிகரித்து வரும் நிலையில், முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகமூடி அணிந்து வெளியே வரவேண்டும். அதிகமா கூட்டம் சேரும் இடங்களில் செல்லாமல் தவிர்க்க வேண்டும். வீட்டிலே ஒருவர் வெளியே சென்று வந்தால் வந்த பிறகு குளிப்பது நலம். மேலும், நமக்கு காய்ச்சல் வராமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எப்படி சொல்கிறீர்கள் புரியவில்லையே?கொரோனா நோய்த்தொற்று வந்து காய்ச்சல் வருவது வேறு. நாமாக சென்று காய்ச்சலை வாங்கி வருவது வேறு. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் சிலருக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மழையில் நனைந்தால் குளிர்ச்சியானவற்றை குடித்தால் காய்ச்சல் வந்துவிடும். அப்படி வரும் பொழுது நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் குறையும். அந்த நிலையில் நமக்கு கொரோனா தொற்றும் உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஆகையால் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை பெருக்கி நோய் அண்டாமல் இருக்க வழி செய்ய வேண்டும்.
எனக்கு இப்போது காய்ச்சல் அல்லது தடுமம் பிடித்திருக்கிறது எனில் நான் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று நமக்கு இருக்கும் அறிகுறிகளைச் சொல்லி தக்க மருத்துவம் பெற வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும் நலம்தான். எனினும் உங்களுக்கு
அதிக செலவு ஆகும். தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்ற வேண்டுமென்றால் ₹.3 ஆயிரம் கட்டணம் இப்போது. முன்னர் ₹.4500 இருந்தது.
தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் என்று செல்வோருக்கு பரிசோதனை செய்யாமலேயே அனுப்பி விடுவதாக சொல்லப்படுகிறதே?
அப்படி இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்கிறார்கள். சென்னையில் 5 முதல் 10 தனியார் சோதனை நிறுவனங்கள் இருக்கின்றன.
கடைசி நேரத்தில் பரிசோதனை செய்வது உண்மையா?
சோதனை எப்படி செய்கிறார்கள் என்பது மருத்துவமனை மற்றும் மருத்துவரைப் பொருத்தே. மருத்துவ அறிவுரை வழங்கினாள் சோதனை செய்யப்படுகிறது. சில மருத்துவமனைகள் இத்தகைய அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முதலில் அனுமதிக்கப் பயப்படுகின்ற காரணத்தால், அரசு மருத்துவமனைக்கு போகச்சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அது ஏனென்றால் கொரோனா பாசிட்டிவ் ஆக இருந்து விட்டால் தற்காப்பு கருவிகள் வாங்க வேண்டும், பயன்படுத்த வேண்டுமே! அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். எனவே தான் பயப்படுகிறார்கள்.
தற்பொழுது மருத்துவர்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது?
அரசு, மருத்துவர்களுக்கான பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்பதில்லை. எனவே அந்தப் பணியில் சேர்வதற்கு தயக்கமாக இருக்கிறது. மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகம், மருத்துவர்களின் பாதுகாப்பு அவர்களின் சொந்த பொறுப்பு என கூறி விட்டது உச்சநீதிமன்றத்தில். இது அனைத்து மருத்துவர்களுக்குமே கோபத்தை உண்டாகிவிட்டது. பின்னும் மருத்துவர்கள் தங்களது தார்மீக எண்ணத்தால் பணிக்கு செல்கிறார்கள்.
மேலும் மருத்துவமனைகள் தற்பொழுது கொரானா வார்டில் பணிபுரிவதற்கான வேலை ஆட்களை எடுக்கிறார்கள். அதிகமாக பயிற்சி முடித்த மருத்துவர்கள் மற்றும் புதிய மருத்துவர்களையே அங்கே பணியமர்த்துகிறார்கள்.
அரசு இந்த இக்கட்டான நேரத்தில் புதிய மருத்துவர்களை பணியில் எடுத்து இருக்கிறதா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலிப் பணியிடங்களுக்கு அரசு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தற்போது பணி அமர்த்தி இருக்கிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணிபுரிவதற்காகவே புதிய மருத்துவர்களை மூன்று மாத ஒப்பந்தத்திற்கு எடுத்துக்கொள்கிறார்கள். எனினும் மேற்சொன்னது போலவே அவர்களுடைய பாதுகாப்பிற்கு அரசு பொறுப்பு ஏற்பது இல்லை. ஒரு அரசு மருத்துவர் 50,000 முதல் 60,000 வரை சம்பளம் எனில் தற்போது 40 ஆயிரம் வரை தருகிறார்கள்.
அரசு ஏன் நிரந்தர மருத்துவர்களை பணியில் இப்போது எடுக்கக் கூடாது?
அப்படி எடுத்தால் அவர்கள் காசு பார்க்க முடியாதே. பொதுவாக மருத்துவர்களின் நியமனத்திற்கு பல லட்சம் ரூபாய் தரவேண்டும். தந்தால்தான் அரசு மருத்துவர் பணி இல்லையெனில் இல்லை. தகுதி திறமையை வைத்து மட்டுமே அரசு பணியில் சேர்பவர்கள் எண்ணிக்கை குறைவே. பணத்தைப் பெற்றுக் கொண்டு பணியாணை தருவது தான் அதிகம்.
இன்னும் என்ன சொல்வது எங்கு காணினும் ஊழலே! அரசும் சரி தனியாரும் சரி புதிய மருத்துவர்களையே கொரோனா வார்டில் பணி அமர்த்துகிறார்களே, இது சரியா? ஒரு புதிய மருத்துவருக்கு என்ன அனுபவம் இருக்கும் இதேபோன்ற இக்கட்டான நோயாளிகளை அணுகும் பொழுது?
அப்படி இல்லை. ஓராண்டு பயிற்சி முடியும் பொழுது நாங்கள் எந்தவிதமான நோயாளிகளையும் கையாள தேர்ந்து விடுவோம். கூடுதலாக ஒரு வார பயிற்சி மட்டும் அளித்தால் போதும். கொரோனா வார்டில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்று விடுவோம். மிகவும் இக்கட்டான அல்லது ஐசியூவில் வைக்க வேண்டிய நிலைமையில் மட்டும் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. அனுபவம் வாய்ந்த மருத்துவரை அழைத்து தான் ஆகவேண்டும். எனக்கு யோசனையாக இருந்தது, ஒப்பந்தப் பணியில் சேர வேண்டுமா என! விண்ணப்பம் எல்லாம் வாங்கி சேர்வதற்கு தயாராகி இருந்த சூழ்நிலையில் தான் மத்தியஅரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்தது. அரசு பொறுப்பு துறந்துவிட்டதால் நான் அப்பணியில் சேரவில்லை. அரசு இன்னும் கூடுதலாக சம்பளமும், நிரந்தரமான வேலையும் தருவதாக சொல்வார்கள் என்றால் நிறைய பேர் பணியில் சேர்வார்கள். ஆனால் அதுதான் நடக்காதே! நாம் கூட சொல்வோமே மனிதம் மனிதம் என்று. ஆனால் அது சாத்தியமற்ற ஒன்றே. நான் கூட பணியில் சேராமல் போனதற்கு காரணம் சம்பளமும் என்னுடைய பாதுகாப்பும் தான் காரணம். குறைந்தபட்சம் அரசு என்னுடைய பாதுகாப்பிற்காகவது பொறுப்பேற்றிருந்தால் நான் சென்றிருப்பேன்.
--
என்ன அரசாங்கம் இது?! உண்மையிலேயே அரசு மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது. கத்தாரில் இருந்து நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அங்கே கிட்டத்தட்ட அனைத்தும் இலவசம். 70000 பேர்களுக்கு மேல் பாதிப்பிற்கு உள்ளான நிலையில் வெறும் 57 பேர்தான் உயிரிழந்து உள்ளார்களாம். நாம் முன்னேற வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!
[2] https://www.nationalheraldindia.com/national/ccmb-finds-distinct-cluster-among-coronavirus-in-india
Comments
Post a Comment