இந்தியாவின் தற்சார்பில் சீனா எங்கே வந்தது? பகுதி-1

இந்தியாவின் தற்சார்பில் சீனா எங்கே வந்தது?

- சு.முத்துக்குமார் 27.06.2020

இன்றைக்கு நாடு முழுக்க மிகப்பெரிய பரப்புரை கிளம்பியிருக்கிறது. அது என்னவெனில் சீன பொருட்களை, சீனத் தயாரிப்புகளை, சீன நாட்டின் செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதாம். உண்மை என்ன? நம்மால் முற்றிலுமாக சீன பொருட்களை புறக்கணித்து விட முடியுமா? நாம் சீனப் பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும்? நமக்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவில் இருக்கும்?
பொறுங்கள்! இதற்கெல்லாம் பதில்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் வளங்கள்:

நாம் எல்லாருக்கும் தெரியும் இந்தியா உலகின் மக்கள் தொகையில் 18% கொண்டு உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எனினும் உலகின் நீர் வளத்தில் வெறும் 4% தான் நம்மிடம் இருக்கிறது.
வனவளம், மீன்வளம், நிலக்கரி ஆகியவற்றை கணிசமான அளவில் இந்தியா பெற்றிருக்கிறது.
எண்ணெய் இருப்பு அதிக அளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு இந்தியாவில் இருக்கிறது.  இயற்கை எரிவாயு மற்றும் ஷேல் கேஸ் நிலக்கரி படுகை எரிவாயு ஆகியவையும் இந்தியாவில் காணக்கிடைக்கிறது.
இவை போக, உலோகங்களான துத்தநாகம் (ஜிங்க்) இருப்பு இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இந்திய நிறுவனமான இந்துஸ்தான் ஜிம்கி லிமிடெட் உலக அளவில் துத்தநாக உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
வெள்ளி உற்பத்தியில் உலக அளவில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
உலகிலேயே மூன்றாவது அதிகளவான இரும்புத்தாது இந்தியாவில் கிடைக்கிறது; உற்பத்தியும் அதே அளவில் இருக்கிறது. குரோமைட் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. அரு மணல் தாதுக்களான (Rare earth minerals) கார்னெட், இல்மனைட், டைட்டானியம், ஜிர்கோனியம் ஆகியவை இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் அணுக்கரு உலையில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் தோரியம் இந்தியாவில்தான் அதிகளவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக யுரேனியம் ஆந்திரப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக அளவில் இருப்பு உள்ளதாக முதல்கட்ட கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது. 

இந்திய பொருளாதாரம்:

இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட 3.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உடன் உலகில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறது. பொருளாதாரத்தில்

வேளாண்மைத் துறை- 15.4 விழுக்காடு

சேவைத் துறை              - 61.5 விழுக்காடு

தொழில்துறை              - 23.1 விழுக்காடு

ஏற்றுமதி: இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 262.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இதில் முதல் ஐந்து இடம் வகிக்கும் நாடுகள் பின்வருவன:
இந்தியா துரப்பண செய்யப்பட்ட கச்சா எண்ணெய், பெட்ரோல் பொருள்கள், இயந்திர உதிரிபாகங்கள், விலை உயர்ந்த மணிகள், நகைகள், அணிகலன்கள், வாகனங்கள், கரிம வேதி பொருட்கள், மின்னியல் இயந்திரங்கள், மருந்து பொருட்கள், இரும்பு மற்றும் உருக்கு, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் பருத்தி, மீன்கள் மற்றும் கடல்சார் உணவுகள், காபி, டீ, நறுமண பொருட்கள் மற்றும் அரிசி ஆகிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இறக்குமதி: இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 381.01 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
முதல் பத்து இறக்குமதி நாடுகள்.

இந்திய-சீன வணிகம்:
இந்தியாவின் ஆகப் பெரிய வணிக நாடாக சீனா திகழ்கிறது. இந்தியா சீனாவில் இருந்து தனது மொத்த இறக்குமதியில் இந்தியா கிட்டத்தட்ட 17% பொருட்களை இறக்குமதி செய்கிறது. தனது மொத்த ஏற்றுமதியில் 5% பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

சீன பொருட்களை முற்றிலுமாக புறக்கணிப்பது,  சீனாவிற்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது, இந்தியாவிற்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கீழ்க்கண்ட கணக்கின் வாயிலாகக் காண்போம்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு = $. 262.29 பில்லியன்
இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பு‌ =$. 381.01 பில்லியன்

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி = $. 16.34 பில்லியன்
நமது மொத்த ஏற்றுமதியில் = 5.08% 
(பட்டியலில் சீனாவிற்கு மூன்றாவது இடம்)

இந்தியாவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி = $. 68.06 பில்லியன்
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் = 14.37%
( பட்டியலில் சீனாவிற்கு முதலிடம்)

இந்தியாவின்  பிற நாடுகளுடனான மொத்த வணிகம் = $. 758.30 பில்லியன்
சீனாவுடனான பரஸ்பர வணிகம் = $. 84.4 பில்லியன்
( பட்டியலில் சீனாவிற்கு முதலிடம்)

இப்போது சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியைப் பார்ப்போம்.

சீனாவின் மொத்த ஏற்றுமதி = $. 2263.3 பில்லியன்
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு ஆனா ஏற்றுமதி = $. 68.06 பில்லியன்
சீனாவின் மொத்த ஏற்றுமதியில் = 3%
(பட்டியலில் இந்தியாவிற்கு ஏழாவது இடம்)

சீனாவின் மொத்த இறக்குமதி= $. 1843.7 பில்லியன்
இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி = $. 16.34 பில்லியன்
சீனாவின் மொத்த இறக்குமதியில் = 0.88 %
( பட்டியலில் இந்தியாவிற்கு பத்தொன்பதாவது இடம்)

சீனாவின் பிற நாடுகளுடனான மொத்த வணிகம் =$. 4107.1 பில்லியன்
இந்தியாவுடனான சீனாவின் பரஸ்பர வணிகம் = $. 84.3 பில்லியன்
( பட்டியலில் இந்தியாவிற்கு 11வது இடம்)


இப்போது நாம் சீனப் பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறோம் என்று எடுத்துக்கொள்வோம், இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சீனாவை நீக்கினால் அதை இட்டு நிரப்ப நாம் வேறு ஒரு நாட்டையோ அல்லது சொந்த தயாரிப்பையோ நம்ப வேண்டும். வேறு நாடு என்றால் இறக்குமதி செய்யும் பொருளின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ள முடியும். உள்நாட்டில் ஒரே நாளில் ஒரே ஆண்டில் தயாரிக்க முடியுமா? இப்போது சீன பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வாய்ப்பு இருக்கிறதா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

இந்திய-சீன வணிகம் கோட்டுப் படங்களில்:



இந்தியா  60% மின்னணு சாதனங்களையும், இந்திய சந்தையில் உள்ள விற்பனையாகும் அலைபேசிகளில் 40 லிருந்து 60% வரையும், வாகன உற்பத்தித் துறையில் 30% உதிரி பாகங்களையும், 90% பொம்மைகளையும், 50% மிதிவண்டிகளையும், மருந்து உற்பத்தித் துறையில் 67% மூலப்பொருட்களையும் ( active pharma ingredient API) சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது.


நாம் ஏன் சீனாவை சார்ந்திருக்கிறோம்?

இந்தியாவில் நாம் உற்பத்தி செய்யும் பலவிதமான பொருட்களுக்கான மூலப்பொருட்கள் உதிரிபாகங்கள் இன்ன பிற சாமான்கள் சீனாவிலிருந்தே தருவிக்கப்படுகின்றன. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
கடைக்கு சென்று பொருள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் எந்த கடையில் குறைவான விலையில் ஓரளவு நல்ல பொருள் கிடைக்கிறதோ அங்கே தானே வாங்குவோம். மிகச் சிறந்த பொருள் கிடைக்கிறது இந்த கடையில் ஆனால் விலை அதிகம் என்றால் பலர் அதை விரும்ப மாட்டார்கள் அதுதான் இயல்பு. அதேபோலத்தான்!
சீன மூலப்பொருட்கள் விலையும் குறைவாக அதேநேரத்தில் ஓரளவு தரத்துடனும் கிடைப்பதால் பலரும் அதையே விரும்புகிறார்கள். எனவே சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிறது.

எடுத்துக்காட்டாக நாம் திருப்பூரை எடுத்துக் கொள்வோம். திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை க்கு தேவையான இயந்திரங்களுக்கான ஊசி முதல்கொண்டு பட்டன், ஜிப்புகள் மற்றும் சாயம் என பல பொருட்கள் சீன இறக்குமதியே! ஆக திருப்பூர் பின்னலாடைத் தொழில் மிகப்பெரிய அளவில் சீனாவை சார்ந்திருக்கிறது. இந்தப் பொருட்களையெல்லாம் நாம் இந்தியாவிலே உற்பத்தி செய்து இருக்கலாமே? ஏன் இல்லை?
அதே பொருளை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இங்கே யாரிடமும் பெரிதாக இருப்பது இல்லை. அப்படி உற்பத்தி செய்தாலும் விலை கட்டுபடியாகுமா என்கிற பயமும் ஒரு காரணம்!

ஒரே நாளில் நாம் சீன பொருட்களை நிறுத்தி விட முடியுமா என்ன? முடியவே முடியாது.
முடியாது என்றால் இன்றைக்கு முடியாது, நாம் நமது தேவைக்கான பொருட்களை இங்கேயே உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திய பின் நம்மால் நிறுத்த முடியும்.

சீனா எப்படி உலகின் தொழிற்சாலை ஆனது?

இந்தியாவும் சீனாவும் விடுதலை அடையும் வரை சற்றேறக்குறைய ஒரே அளவான பொருளாதாரத்தை தான் கொண்டிருந்தது. சொல்லப்போனால் கிபி.1,500 வரை இந்தியாதான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் இருந்த நாடு.  இந்திய விடுதலைக்குப் பின், இந்தியா அடைந்த வளர்ச்சியும் சீன அடைந்த வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்ப்போம் எனில் 1978-83 பிறகு சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது. சீனாவை உலகின் தொழிற்சாலை என்று சொல்லும் அளவுக்கு அங்கே தொழிற்சாலைகள் விரவிக்கிடக்கின்றன. உலகின் மிகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்களது உற்பத்தி இடங்களை ஆலைகளை சீனாவில் நிறுவுவதற்கு தான் விரும்புகிறார்கள். அங்கேயே இருந்து உற்பத்தி செய்து உலகம் முழுக்க தங்களுடைய நிறுவனத்தின் பிராண்ட் பெயரில் விற்பனை செய்கிறார்கள். ஆப்பிள் ஐபோன் முதல் ஆடி கார் வரை சீன பொருட்கள் இல்லாமல் அல்லது சீனாவின் தொடர்பு இல்லாமல், இன்றைய தேதியில் முழுமை பெறுவது இல்லை.
சரி, எப்படி சீனா இந்த நிலையை அடைந்தது? சீன அரசு வகுத்த திட்டங்களும் கொள்கைகளும், அதை முறையாகப் பின்பற்றிய விதமும், அவர்களுக்கு இருந்த தொலைநோக்கும் இதை சாத்தியமாக்கின.

இன்றைக்கு, சீன பொருளாதாரத்தின் அளவு 14.140 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய பொருளாதாரத்தை போல கிட்டத்தட்ட ஐந்து மடங்கு. இவ்வளவு பெருமதிப்புடன் சீனா உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது. மேலும் குறிப்பாக, உலகிலேயே, பொருளாதாரத்தில் தொழில்துறை மிக அதிக பங்களிப்பது சீனாவில் தான். உலகின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பை கீழ்க்காண் படத்தில் காணலாம். 


கிட்டத்தட்ட 50 க்கும் மேலான நாடுகளுக்கு சீனா முக்கிய ஏற்றுமதியாளராக/வணிகப் பங்காளியாக  (Leading exporter and trading partner) இருக்கிறது.  இந்தியாவோ 5+ நாடுகளின் வணிகக்கூட்டாளியாக இருக்கிறது.


சீனா தொழில் வளர்ச்சி அடைந்ததற்கான சில காரணங்கள் இங்கே உங்களுக்காக சொல்கிறேன்:

  • அளவில்லாத மக்கள் வளம்
  • மலிவான தொழிலாளர்கள்
  • குறைந்த வரிகள் (0% வாட் வரி)
  • வலிமையான பொருளாதாரச் சூழல்
  • குறைந்த கட்டுப்பாடுகள்

என்னதான் நாம் மலிவான தொழிலாளர்கள் சீனாவில் கிடைக்கிறார்கள் என்று சொன்னாலும் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய முறையான கணக்கு கூட இல்லை. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நாமெல்லாம் பார்த்தோம்! புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வளவு வேதனை அடைந்தார்கள், என்ன பாடுபட்டு ஊர் போய் சேர்ந்தார்கள் என்பதை எல்லாம் இப்பொழுதுதான் தெரிந்து கொள்கிறோம். ஆனால் சீனாவில் அப்படி கிடையாது. கிராமத்தை விட்டு ஒருவர் நகருக்கு இடம் பெறுகிறார் எனில் முதலில் அவருக்கு வேலை இருக்க வேண்டும். வேலை கிடைத்தாலும் அவர் மட்டுமே நகருக்குச் சென்று பணிபுரிவதற்கான அனுமதி தரப்படும். அவருக்கு என்ன ஒரு பாஸ் தரப்படும். அது இருந்தால் மட்டுமே அவரால் அந்த நகரத்தில் அரசின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மருத்துவமனை வசதிகள். அவர் தன் குடும்பத்தை நகருக்கு அழைத்து வர இயலாது. ஒருவேளை வந்தால் அரசின் வசதிகளைப் பெற இயலாது. இது ஏன் என்பதற்கு அரசு சொல்லும் காரணம், அந்த நகரில் இன்னும் அத்தனைபேர் வசிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படவில்லை என்பதாம்.
ஷாங்காய் நகரில் வசிக்கும் ஒரு தொழிலாளி குறைந்தபட்ச மாத வருமானமாக ₹. 26,625 கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. அதே இந்தியாவை எடுத்துக் கொள்வோமானால் மும்பை மாநகரிலோ தில்லியிலோ ஒரு தொழிலாளி பெறும் குறைந்தபட்ச வருமானம் ₹.10000 என எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வளவு குறைந்த வருமானம் பெறுவதற்கு இந்தியாவில் தொழிலாளர்கள் இருந்தாலும் இந்தியாவில் மலிவாக பொருட்களை தயாரிக்க முடியவில்லை, ஏன்?
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நாம் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சீனா எவ்வளவு செலவு செய்து இருக்கிறது தெரியுமா? சீனா 6Gயை சோதனை செய்ய இருக்கிறது? இதைப்பற்றி படித்தீர்களா? இந்தியா தற்சார்பு நாடாகுமா?

நாம் அடுத்த பகுதியில்விரிவாக காண்போம்.

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை